தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும், முன்னாள் முதல்வருமான என்.டி. ராமராவ் நூற்றாண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசினார். இதற்கு ஆந்திர அமைச்சர்கள், ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் ஹீரோ, ஆந்திராவில் ஜீரோ என்று சாடியுள்ளனர்.
முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான என். சந்திரபாபு நாயுடுவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழ்ந்ததையடுத்து ஆந்திர பிரதேச அமைச்சர்கள் மற்றும் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
சந்திரபாபு நாயுடுவை பாராட்டியதற்காக நடிகர் ரஜினிகாந்த்தை ஆந்திரப் பிரதேச சுற்றுலாத்துறை அமைச்சரும் முன்னாள் நடிகையுமான ஆர்.கே. ரோஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கருத்து கேலிக்கூத்து என கடுமையாக சாடியுள்ளார்.
விஜயவாடாவில் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும், முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தபோது ஹைதராபாத் அடைந்த முன்னேற்றத்தையும் அவரது தொலைநோக்கு பார்வையையும் குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடுவை பாராட்டினார்.
2004 வரை பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இருந்ததாகவும், கடந்த 20 ஆண்டுகளில் சந்திரபாபு நாயுடு இல்லாமல் ஹைதராபாத் வளர்ச்சி கண்டுள்ளது என்றும் ரஜினிகாந்துக்கு அமைச்சர் ரோஜா நினைவூட்டினார்.
நடிகர் ரஜினிகாந்த் ஒரு கோழை என நீர்வளத்துறை அமைச்சர் அம்பதி ராம்பாபு தாக்கிப் பேசினார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார் ஆனால், பின்னர் ஓடிவிட்டார். அரசியல் பற்றி பேச ரஜினிகாந்த் தகுதியற்றவர். தனது மாமனார் என்.டி.ஆரை ஆட்சியில் இருந்து நீக்கியபோதும் ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக நின்றதை அமைச்சர் அம்பதி ராம்பாபு நினைவுகூர்ந்து பேசினார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் கோடாலி நானி கூறுகையில், ரஜினிகாந்த் தமிழகத்தில் ஹீரோவாக இருக்கலாம் ஆனால் ஆந்திராவில் ஜீரோ என்று பேசினார். சந்திரபாபு நாயுடு பற்றி ரஜினிகாந்த்திடம் கேட்க வேண்டுமா என்று அவர் கேள்வி எழுப்பினார். தமிழ் சூப்பர் ஸ்டார் என்.டி.ஆரின் சிறந்த குணங்களைப் பற்றி நிறைய பேசினார் என்று கோடாலி நானி கூறினார். “ஹைதராபாத்தில் உள்ள வைஸ்ராய் ஹோட்டலில் என்.டி.ஆர் தாக்கப்பட்டபோது, என்.டி.ஆர் ஏன் அவருக்கு உதவ வரவில்லை என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன் என்று 1995-ல் என்.டி.ஆருக்கு எதிராக சந்திரபாபு நாயுடு தலைமையிலான கிளர்ச்சியைக் குறிப்பிட்டுப் பேசினார்.
சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்கு பார்வை குறித்து ரஜினிகாந்த் கூறியதை யாரும் நம்பத் தயாராக இல்லை என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் கோடாலி நானி கூறினார். நடிகர் ரஜினிகாந்த் மூன்று நாட்கள் படப்பிடிப்பில் ஈடுபடுவதாகவும், ஆறு நாட்கள் மருத்துவமனையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சந்திரபாபு நாயுடுவை தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்று கூறிய ரஜினிகாந்த், ஆந்திராவை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்ற சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்கு பார்வைதான் வரும் ஆண்டுகளில் அந்த மாநிலத்தை நாட்டிலேயே மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று கூறினார்.
விஷன் 2047 மூலம் ஆந்திராவை மேம்படுத்த சந்திரபாபு நாயுடு திட்டமிட்டு வருவதாகவும், அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவில் ஆந்திரா மிகப்பெரிய உயரத்தை எட்டும். அதைச் செயல்படுத்தும் பலத்தையும் சக்தியையும் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
1996 ஆம் ஆண்டு விஷன் 2020 பற்றியும், தகவல் தொழில்நுட்பத் துறை எவ்வாறு ஏற்றம் அடையும் என்றும் சந்திரபாபு நாயுடு பேசினார். பில் கேட்ஸ் போன்ற தொழில் அதிபர்களும் நாயுடுவைப் பாராட்டி, ஆந்திரப் பிரதேசத்தில் தங்கள் நிறுவனங்களை நிறுவினர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.