சவுதி அரேபியாவில் பணிக்கு சென்ற இடத்தில் உரிமையாளர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தன் தாயை மீட்டதற்காக, அவரது மகள் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சாயினாப் பேகம் என்ற பெண் ஒருவர், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்றுள்ளார். அங்கு, வேலை செய்த இடத்தில் சாயினாப் பேகம் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், உடல் ரீதியாக தாக்குதலுக்கு ஆளானதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், அவர் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நடவடிக்கை மூலம் நேற்று மீட்கப்பட்டு இந்தியா வந்தார்.
அதற்காக அவரது மகள் ருபீனா பேகம் சுஷ்மா ஸ்வராஜூக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“என் அம்மா வேலைக்கு சென்ற இடத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். அவரிடம் தவறாக நடந்துகொண்டனர், தாக்கினர். அவரை மீட்டதற்காக சுஷ்மா ஸ்வராஜூக்கும் இந்திய தூதரகத்திற்கும் நன்றி”, என ருபீனா பேகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சாயினா பேகம் கூறியதாவது, “நான் வேலைக்கு சென்ற இடத்தில் உரிமையாளர்கள் என்னை மிகவும் துன்புறுத்தினர். நான் தற்கொலை செய்ய நினைத்து ஒருநாள் விஷம் அருந்தினேன். ஆனால், அவர்கள் என்னை மருத்துவமனைக்கு கூட அழைத்துச் செல்லவில்லை”, என தெரிவித்தார்.