குஜராத்தில் கால்பதித்த ஒமிக்ரான்… பாதிப்பு 3 ஆக உயர்வு!

குஜராத்தில் 71 வயதான முதியவருக்கு ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில், ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவில் உருவாகி உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, பெங்களூருவை சேர்ந்த 46 வயது மருத்துவருக்கும், இந்தியாவுக்கு வந்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 66 வயது முதியவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, நாடு முழுவதும் சர்வதேச நாடுகளில் இருந்து திரும்புபவர்ளுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், குஜராத்தில் 71 வயதான முதியவருக்கு ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குஜராத் ஜாம்நகருக்கு வந்த அவருக்கு பரிசோதனை செய்ததில், டிசம்பர் 2 ஆம் தேதி கொரானா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரின் மாதிரியை மரபணு வரிசை பரிசோதனைககாக அனுப்பி வைத்ததில், ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜாம்நகர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ” பாதிக்கப்பட்டுள்ள நபர் நவம்பர் 28 ஆம் தேதி ஜிம்பாப்வேயில் இருந்து ஜாம்நகருக்கு வந்துள்ளார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, அருகிலுள்ள மையத்தில் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவர் ரிலையன்ஸ் அறக்கட்டளையால் ஜாம்நகரின் பல் மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்ட கோவிட் -19 மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார்.

நோயாளியின் இரண்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஒன்று, குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்திற்கும்( GBRC) , மற்றொரு NIV புனேவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதில், ஒமிக்ரான் தொற்றை GBRC தான் கண்டறிந்துள்ளது. தற்போது, என்ஐவியின் முழு மரபணு வரிசை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்” என்றார்.

இதன் மூலம் இந்தியாவில், ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Zimbabwe returnee tested positive for omicron in gujarat

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express