முதியோர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் மீண்டும் குணமாவது கடினம் என்று மருத்துவத்துறையினர் கணித்து வந்த நிலையில், இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 101 வயது முதியவர் பூரணமாக குணமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுஹான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 28 ஆயிரம் பலியாகியுள்ளனர். 6 லட்சத்துகும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
முதலில் கொரோனா வைரஸ் வெடிப்பு நிகழ்ந்த சீனாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுதான் ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பால அதிக உயிரிழப்பு ஏற்பட்ட நாடாக இருந்தது. இந்த வைரஸ் பல நாடுகளுக்கு பரவிய பின்னர், இத்தாலியில் 9,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர். ஸ்பெயினில் 5000-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஈரானில் 2,000-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
கொரோனா பாதிப்பால் சீனாவை விட அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடாக இத்தாலி முதலிடத்தில் உள்ளது. கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் முதியவர்கள். சுவாசக்குழாயில் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் முதியவர்கள் உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்த்துறையில் ஒரு கணிப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், தான் எல்லா கணிப்புகளையும் தகர்க்கும் வகையில் இத்தாலியில், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட 101 வயது முதியவர் ஒருவர் குணமாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியின் வடகிழக்கு கடற்கரை நகரமான ரிமினியில் 101 வயது முதியவர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமானதாக ரிமினி துணை மேயர் குளோரியா லிசி தெரிவித்துள்ளார்.
1918 முதல் 1919 வரை உலக அளவில் பரவிய ஸ்பானிஷ் காய்ச்சலான ஹெச்1என்1 வைரஸ் காய்ச்சலுக்கு 50 மில்லியன் பலியானார்கள்.
1919 ஆம் ஆண்டு பிறந்த இந்த 101 வயது முதியவர், இரண்டாம் உலகப்போர், பசி, பட்டினி, வலி, முன்னேற்றம், நெருக்கடி, மறுமலர்ச்சி என எல்லாவற்றையும் பார்துள்ளார். இப்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்தும் மீண்டு காலத்தின் சாட்சியாக உள்ளார். இந்த 101 வயது முதியவர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.