கடந்த சில வருடங்களாகப் போர் மற்றும் பதற்றமான சூழல் காரணமாக ஈழத்தமிழர்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கடல் வழியாகத் தஞ்சமடைய முயற்சி செய்தனர். இதையடுத்து சமீப ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கு உதவியதாகக் கூறி இலங்கை வாழ் சிங்கள மக்களும் வெளிநாடுகளில் தஞ்சமடைவது அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றது. இந்த வகையில், ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து செல்ல முயற்சிப்பவர்களுக்கு மலேசியா மற்றும் இந்தோனேசியா முக்கிய இணைப்பு நாடுகளாக இருந்து வருகிறது.
இவ்வாறு நிலவி வரும் சூழலில், கடந்த மே 1 ஆம் தேதி மலேசியாவில் உள்ள தன்ஜங் கேமுக் (Tanjung Gemuk) என்ற பகுதியில் மலேசிய காவல்துறையினரால் 131 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் செய்தியை மலேசிய காவல்துறை உறுதி செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 98 ஆண்கள், 24 பெண்கள், 4 சிறுவர்கள், 5 சிறுமிகள் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுள் எத்தனை நபர்கள் சிங்களர்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
சட்ட விரோதமாகச் செல்ல முயன்ற ‘எட்ரா’ டேங்கர் கப்பல்
சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழைய முயன்ற இவர்கள், ‘எட்ரா’ என்ற டேங்கள் கப்பலை உபயோகித்துப் பயணித்துள்ளனர். இவர்களைக் கைது செய்த போலீசார் அக்கப்பலையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இந்தச் செயலில் பயன்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்று, அதிலிருந்து 3 இந்தோனேசியர்களும், 4 மலேசியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த ஆள் கடத்தலில் தொடர்புடைய மேலும் 5 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மலேசிய காவல்துறை தலைமை அதிகாரி முகமத் பூஸி ஹரூன் கூறுகையில், “கடந்த 2017ம் ஆண்டு மத்தியிலிருந்து இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா, மலேசியா எனச் சர்வதேச தொடர்புகளுடன் இந்த ஆள் கடத்தல் கும்பலைச் செயற்பட்டு வந்தது. இக்கைதுகளின் மூலமாக மிகப்பெரிய தந்திரமான ஆள் கடத்தல் கும்பலை வெற்றிகரமாக மடக்கிப் பிடித்திருக்கிறோம்.” என்றார்.
இப்பொழுது நடைபெற்றுள்ள இந்த கைது நடவடிக்கை ஆட்கடத்தல் தொடர்பாக மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சமீப மாதங்களில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையாகும்.