scorecardresearch

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 19 குழந்தைகள் உட்பட 21 பேர் பலி

டெக்ஸாஸ் ஆளுநர் கிரெக் அபோட் கூறுகையில், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய சல்வடார் ராமோஸ், காவல்துறை அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 19 குழந்தைகள் உட்பட 21 பேர் பலி

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் செயல்படும் தொடக்கப் பள்ளிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், 19 குழந்தைகள் உட்பட 21 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் பள்ளி வளாக்ததில் நிகழ்ந்த மிகப்பெரிய துப்பாக்கி சூடு சம்பவமாகும்.

ஆரம்பத்தில் 18 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறிய நிலையில், டெக்சாஸ் பொதுப் பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் மொத்தம் 19 குழந்தைகளும், 2 பெரியவர்களும் உயிரிழந்ததாக தெரிவித்தார். இறந்த மாணவர்கள் அனைவரும் 2 ஆம் வகுப்பு முதல் 4 ஆம் வகுப்பு படித்தவர்கள் ஆவர்.

குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “துப்பாக்கிச் சட்டங்களைத் தாமதிப்பவர்களுக்கு/தடுப்பவர்களுக்கு இந்தக் கொடூரத்தை தெரியப்படுத்த வேண்டும். ஒரு தேசமாக, துப்பாக்கி லாபிக்கு எதிராக அமெரிக்கர்கள் நிற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பலர் காயம்

சான் அன்டோனியோ பல்கலைக்கழக மருத்துவமனை தனது ட்விட்டர் பக்கத்தில், உவால்டேயில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நான்கு பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 66வயது பெண்ணும், 10 வயது சிறுமியும் ஆபத்தான நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

உவால்டே மெமோரியல் மருத்துவமனையில், 15 மாணவர்கள் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், தூப்பாக்கி குண்டு பாய்ந்த 45 வயதான நபரும், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர் கிரெக் அபோட் கூறுகையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமான சல்வடார் ராமோஸ், காவல்துறை அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில், 2 காவல் துறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர். ஆனால், உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிவித்தார்.

முதலில் பாட்டியை துப்பாக்கியால் சுட்ட குற்றவாளி

18 வயதான சல்வடார் ராமோஸ் முதலில் தனது பாட்டியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளான். காரை சான் அன்டோனியோவிற்கு மேற்கே 130 கிமீ தொலைவில் உள்ள உவால்டேயில் ராப் தொடக்கப் பள்ளி அருகே மோதியுள்ளார். காரிலிருந்து இறங்கிய சல்வடார், பள்ளிக்குள் நுழைந்து இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார். இதற்கு பின்னணியில் உள்ள காரணம் தெரியவில்லை. ஆனால், தனிநபராக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

ராய்ட்டர்ஸ் தகவலின்படி, சமீபத்தில் மாணவர்கள் உயிரியல் பூங்காவிற்கு சென்று, திறமை வெளிகாட்டும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதாக பள்ளியின் பேஸ்புக் பக்கம் தெரிவிக்கிறது. அதற்கு விருது வழங்கும் விழா, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதால், மாணவர்கள் அழகான உடையும், வேடிக்கையான காலணியும் அணிந்துவருமாறு கூறியிருந்தது தெரியவந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: 19 children 2 teachers killed at texas elementary school