22 இந்தியர்களுடன் மேற்கு ஆப்பிரிக்கா கடலில் கப்பல் மாயமாகியிருக்கிறது. நடுக்கடலில் கொள்ளையர்கள் கடத்தினார்களா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
22 இந்தியர்களுடன் வணிகக் கப்பல் ஒன்று, மேற்கு ஆப்பிரிக்கா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. மும்பையில் இயங்கும், ‘ஆங்கிலோ ஈஸ்டர்ன் ஷிப்பிங் கம்பெனி’ என்கிற நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் அது! அதில் ஆயில் டேங்கர் ஏற்றப்பட்டிருந்தது.
மேற்கு ஆப்பிரிக்கா கடல் பகுதியில் நைஜீரியா மற்றும் பெனின் நாட்டு கடற்கரையை ஒட்டிய பகுதியில் மேற்படி கப்பல் மாயமாகியிருக்கிறது. மேற்கு ஆப்பிரிக்க கடல் பகுதியில் கடல் கொள்ளையர்களின் ஆதிக்கம் அதிகம்! எனவே எண்ணெய் கப்பலை கடற் கொள்ளையர்கள் கடத்தினார்களா? அதில் பயணம் செய்த 22 இந்தியர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை.
கப்பல் மாயமானது குறித்து, ஆங்கிலோ ஈஸ்டர்ன் ஷிப்பிங் கம்பெனி சார்பில் மும்பை கப்பல் போக்குவரத்து இயக்குனரகத்தில் புகார் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் இந்திய வெளியுறவுத் துறை மூலமாக நைஜீரியா, பெனின் அரசை தொடர்புகொண்டு கப்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.
‘மரைன் எக்ஸ்பிரஸ்’ என்கிற அந்தக் கப்பல் மாயமானது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ராவீஷ்குமார் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘நைஜீரியா தலைநகர் அபுஜாவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக இரு நாட்டு அதிகாரிகளிடமும் தொடர்புகொண்டு எண்ணெய் கப்பலை தேட நடவடிக்கை எடுக்கப்படுவதாக’ குறிப்பிட்டிருக்கிறார்.