பிறக்கும் போது ஆப்பிள் பழத்தின் எடை (245 கிராம்) அளவிற்கே இருந்த குழந்தை, தற்போது ஆறு மாதங்களை கடந்து வெற்றிகரமாக வாழ துவங்கியுள்ளது. சர்வதேச அளவில், மிகச்சிறிய அளவில் குழந்தை பிறந்து உயிருடன் வாழ்வது இதுவே முதல்முறை. இந்த குழந்தை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.
அமெரிக்காவின் சாண்டியாகோவில் உள்ள மருத்துவமனையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த குழந்தை பிறந்தது. பிறக்கும்போது வெறும் 245 கிராம் அளவே இருந்தது. இது பெரிய ஆப்பிளின் எடை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குழந்தை, தாயின் வயிற்றில் 23 வாரங்கள் 3 நாட்களுக்கு முன்பாகவே எடுக்கப்பட்டதால், 1 மணிநேரத்திற்குள் இறந்துவிடும் என்று டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். 2 மணிநேரம் கடந்தது, வாரங்கள் கடந்தன, மாதங்கள் கடந்து தற்போது 6 மாதங்கள் ஆகிவிட்டது. அந்த குழந்தைக்கு சேபி என்று பெயரிடப்பட்டுள்ளது.
பிறக்கும்போது 245 கிராம் எடையளவில் இருந்த குழந்தை, டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் தீவிர கண்காணிப்பில் 6 மாதம் கடந்தது. தற்போது அந்த குழந்தை 2,200 கிலோகிராம் எடை கொண்டதாக மாறியுள்ளது. குழந்தை, தாயுடன் வீட்டிற்கு அனுப்பிவைக்கும் போது, குழந்தையை பார்த்துக்கொண்ட டாக்டர்கள், நர்ஸ்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.
இதற்குமுன்னர் 2015ம் ஆண்டில் ஜெர்மனியில் 252 கிராம் எடையில் குழந்தை பிறந்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை, இந்த 245 கிராம் எடையில் பிறந்த குழந்தை முறியடித்துள்ளது.