பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய இருவேறு தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாக செய்தி நிறுவனம் ஏபி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் பேருந்தில் இருந்து பயணிகளை வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டு, அவர்களின் அடையாளங்களைச் சரிபார்த்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக டான் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
உதவி ஆணையர் முசக்கைல் நஜீப் கக்கரின் கூற்றுப்படி, முசகேலின் ரராஷாம் மாவட்டத்தில் உள்ள மாகாணங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலையில் சென்ற பல பேருந்துகளில் இருந்து பயணிகளை இறக்கி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் அவர் கூறுகையில், "பஞ்சாபிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் வாகனங்களை பயங்கரவாதிகள் சோதனை செய்தனர். இதில் பஞ்சாபைச் சேர்ந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று காக்கர் கூறினார்.
கொல்லப்பட்டவர்களில் மூவர் பலுசிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும், மீதமுள்ளவர்கள் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.
துணை ஆணையர் ஹமீத் ஜாஹிரின் கூற்றுப்படி, குறைந்தது 10 லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டது மற்றும் அவற்றின் ஓட்டுநர்கள் கொல்லப்பட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றொரு சம்பவத்தில், கலாட் மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்தியவர்கள் நான்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஐந்து வழிப்போக்கர்கள் உட்பட குறைந்தது ஒன்பது பேரைக் கொன்றதாக செய்தி நிறுவனம் ஏ.பி தெரிவித்துள்ளது.
கிளர்ச்சியாளர்கள் போலனில் ரயில் தண்டவாளத்தை தகர்த்தனர், மஸ்துங்கில் ஒரு காவல் நிலையத்தைத் தாக்கினர் மற்றும் குவாதரில் வாகனங்களைத் தாக்கி எரித்தனர். இந்த மாவட்டங்கள் அனைத்தும் பலுசிஸ்தானின் கீழ் வருகின்றன. இந்த தாக்குதல்களில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் இருப்பது யார்?
ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, பயங்கரவாதி குழுவான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) ஊடகவியலாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய அறிக்கையில் இந்த கொலைகளுக்கு பொறுப்பேற்றுள்ளது.
ஒரு பெரிய துணை ராணுவ தளம் உட்பட இன்னும் பல தாக்குதல்கள் நடக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதை பாகிஸ்தான் அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிவிலியன் உடையில் பயணித்த ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்கியதாக அமைப்பு கூறியதாகவும், அடையாளம் காணப்பட்ட பின்னர் அவர்கள் சுடப்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால், பலியானவர்கள் அப்பாவி குடிமக்கள் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னதாக, பயங்கரவாத குழு நெடுஞ்சாலைகளுக்கு வருவதை மக்கள் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்திருந்தது.
பிரதமர் ஷெரீப் கண்டனம்
பாகிஸ்தானில் எந்த வகையான பயங்கரவாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் ஷெரீப் கண்டனம்.
இந்த தாக்குதலுக்கு அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். "எந்தவிதமான பயங்கரவாதத்தையும் நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று ஷெரீப் கூறியதாக ரேடியோ பாகிஸ்தான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“