- 1.25 மணிநேரம் அமெரிக்க அதிபராக இருந்த கமலா ஹாரிஸ்
வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீடு ராணுவ மருத்துவ மையத்தில், அதிபர் ஜோ பைடனுக்கு பெருங்குடல் தொடர்பான கொலோனோஸ்கோபி சிகிச்சை நேற்று அளிக்கப்பட்டது. இச்சிகிச்சையின் போது அவருக்கு மயக்க மருந்து செலுத்தப்படும் என்பதால், அமெரிக்க அதிபரின் அதிகாரப் பொறுப்பு, துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு அமெரிக்க ஆயுதப் படைகள் மற்றும் அணு ஆயுதக் கிடங்கின் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. சிகிச்சையில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பிய பிறகு மீண்டும் அதிபர் பொறுப்பு ஜோ பைடனுக்கு வழங்கப்பட்டது.
அமெரிக்க வரலாற்றில் அதிபர் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமை கமலா ஹாரிசுக்கு கிடைத்துள்ளது. சுமார் 1.25 மணிநேரம் அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் இருந்துள்ளார்.
- அமெரிக்க இளைஞர் பிரிவினைவாத கொலை விசாரணைக்குப் பிறகு விடுவிப்பு
அமெரிக்காவில் இன நீதிக்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் இரண்டு நபர்களை சுட்டுக்கொன்றதால் கைது செய்யப்பட்ட இளைஞர் கைல் ரிட்டன்ஹவுஸ் குற்றவாளி அல்ல என விடுதலை செய்யப்பட்டுள்ளார். 18 வயதாகும் அவர் மீது சுமத்தப்பட்ட இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள், கொலை முயற்சி, போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியது என அனைத்து விதமான வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பு விவாத பொருளாக மாறியுள்ளது.
- கனடா கனமழை: எரிபொருள், நெடுஞ்சாலை பயணத்தில் கட்டுப்பாடு
கனடாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. அதன்படி, மாகாணத்தின் சில பகுதிகளில் உள்ள எரிவாயு நிலையங்களில் மக்கள் வாங்கக்கூடிய எரிபொருளின் அளவைக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், அத்தியாவசிய பயணத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற வாகனங்களுக்கு பெட்ரோல் நிலையத்திற்கு ஒரு பயணத்திற்கு சுமார் 30 லிட்டர் மட்டுமே வழங்கப்படவுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் டிசம்பர் 1 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் எரிபொருளுக்கு ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
- போராட்டத்தில் வன்முறை: டச் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்
ரோட்டர்டாமில் கொரோனா தொற்று நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில், திடீரென வன்முறை ஏற்பட்டது. போராட்டக்காரர்கள், கார்களை உடைத்தும், அங்கிருந்து காவலர்கள் மீதும் கற்களையும் வீசத் தொடங்கினர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு, தண்ணீரும் பீய்ச்சி அடித்தனர். இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில், ” வன்முறையை அடக்க வானத்தை நோக்கிய துப்பாக்கியால் சுட்டோம். அதே சமயம், நிலைமை கைமீறிப் போனதால், நேரடி துப்பாக்கி சூடு நடத்தினோம். இரண்டு பேர் காயமடைந்தது எங்களுக்குத் தெரியும். இது எச்சரிக்கை துப்பாக்கிச் சூட்டின் போது ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும், உண்மையான காரணத்தை அறிய விசாரணை நடத்தி வருகிறோம்.
கொரோனா பாஸ் வைத்திருக்கும் நபர்களும் உள் அரங்கத்தில் நுழைய அரசு விதித்திருக்கும் தடைக்கு எதிராக, நூற்றுக்கணக்கானோர் குரல் எழுப்பினர். கொரோனா பாஸ் என்பது அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் அல்லது நோய் தொற்றிலிருந்து குணமாகிவந்தவர்கள் என்பது தான். ஆனால், இந்த பாஸ் தடுப்பூசி முழுமையாக செலுத்தாத நபர்களிடமும் இருப்பதால், கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி என அரசு அண்மையில் அறிவித்தது.
- 4 ஆவது முறையாக டிக்டாக் தடையை நீக்கிய பாகிஸ்தான்
பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் டிக்டாக் செயலி மீதான தடையை மீண்டும் நீக்கியுள்ளது. அவதூறான பதிவுகள் பதிவிடுவதை கட்டுப்படுத்தப்படும் என டிக்டாக் நிறுவனம் உறுதியளித்ததைத் தொடர்ந்து, டிக்டாக் செயலி 4 மாத தடைக்கு பிறகு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த 15 மாதங்களில்,நான்கு முறையாகப் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அதிகாரிகள் டிக்டாக் மீது தடை விதித்து நீக்கியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil