துபாயில் வசிக்கும் தெஹெம்தன் ஹோமி துஞ்சிபாய் மேத்தா, தனது லைசென்ஸை அடுத்த 4 வருடத்திற்கு புதுப்பித்துள்ளார். இதிலென்ன ஆச்சரியம் என உங்களுக்குத் தோன்றலாம்... ஆனால் இருக்கிறது, மேத்தாவுக்கு தற்போது 97 வயது!
இன்னும் 3 ஆண்டுகளில் துபாய் ரோட்டில் வாகனம் ஓட்டிய முதல் 100 வயது மனிதர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகப் போகிறார் மேத்தா. இவருடைய லைசென்ஸ் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் வரைக்கும் செல்லுபடியாகும்.
இந்திய வம்சாவளியைக் கொண்ட கென்யன், மேத்தா தனியாக வாழ்ந்து வருகிறார். கார்கள் மக்களை சோம்பேறியாக்குவதை உணர்ந்துக் கொண்ட அவர், சாலைகளை கடக்க அவசரப்பட்டதில்லை. அதனால் அவர் நடந்து செல்லவே விருப்பம் காட்டுகிறார், சில நாட்கள் 4 மணி நேரம் வரை நடக்கிறார்.
நீண்ட காலமாக துபாயில் வசித்து வரும் மேத்தா திருமணமே செய்துக் கொள்ளவில்லை. இறுதியாக தனது வாகனத்தை 2004-ல் ஓட்டியிருந்தார். இப்போது பொது வாகனங்களையும், தனது கால்களையும் வாகனமாக பயன்படுத்தி வருகிறார். இருந்தாலும் விரைவில் மீண்டும் வாகனம் ஓட்டுவேன் எனும் மேத்தா,
’யார் கிட்டயும் சொல்லாதீங்க, ஒரு ரகசியம் சொல்றேன்... நான் மது அருந்தவும், புகைப்பிடிப்பதும் இல்லை’ எனக் கூறி புன்னகைக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/190209-mehta-97_resources1-300x225.jpg)
ஒரு நட்சத்திர ஹோட்டலில் அக்கவுண்டன்ட் வேலைக்காக 1980-ல் துபாய் வந்த இவர் 2002 வரை அந்த வேலையை செய்துக் கொண்டிருந்தார். பின்னணி விபர சோதனையில் அவரது வயது தெரிய வந்ததால், பேப்பர் போடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

“அப்போது எனக்கு 80 வயது. குடும்பமில்லை, வேலையுமில்லை எங்கு போவதென்ற தெளிவுமில்லை. அதனால் நன்கு யோசித்து, பாதுகாப்பான வாழ்க்கைக்கு என்னுடைய சேமிப்புப் பணத்தில் ஒரு சிங்கிள் பெட்ரூம் வீட்டை வாங்கி, வசித்து வருகிறேன்” எனும் மேத்தா,
நான் என் வாழ்க்கையின் பெரும் பகுதியை தனிமையில் கழித்து விட்டேன். என்னுடைய தங்கை லண்டனில் வசிக்கிறார். ஒவ்வொரு கோடைகாலத்துக்கும் இங்கே வந்து என்னைப் பார்த்து செல்வார். சில ஆண்டுகளுக்கு முன்பு, நானும் கூட லண்டனில் செட்டில் ஆகலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் துபாயில் தான் இருப்பேன் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை” என்கிறார்.

மேத்தாவின் நண்பர்களும் பல வருடத்திற்கு முன்பே இறந்து விட்டனர். இப்போது அவருக்குள்ள ஒரே ஆதரவு, சட்ட நிறுவனமான அல் மிஃப்தா மற்றும் அசோசியேட்ஸ் உறுப்பினர்கள் தான்.