தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள 39 அணைகளில் 35 அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகின்றன. மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து 3 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒருவாரத்தில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 196 ஆகவும், ஒட்டுமொத்தமாக 340-க்கும் மேல் அதிகரித்துள்ளது. 11 மாவட்டங்களில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் இன்று எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் கேரளாவின் துயர் கண்டு மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கேரளாவுக்கு உதவிகள் குவிந்து வருகின்றன. பாலிவுட் திரை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கேரளாவின் நிலையைக் கண்டு வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தென்னாப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் கேரள வெள்ளம் குறித்து ட்விட்டரில் வேதனை தெரிவித்துள்ளார்.
My thoughts and prayers are with the people affected by the terrible floods in Kerala!!! More than 100 dead and 200,000 left homeless.. terrible! #KeralaSOS #KeralaDonationChallenge
— AB de Villiers (@ABdeVilliers17) August 18, 2018
அதில், “கேரளாவில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன். எனது எண்ணங்கள் அவர்களைப் பற்றியே உள்ளது. 100 பேருக்கும் மேல் இறந்துவிட்டனர், 200,000 பேர் தங்கள் உடமைகளை இழந்து தவிக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.