நமக்கெல்லாம் வீட்டுக்குள் ஒரு சின்ன பூச்சியோ, புழுவோ வந்து விட்டால் கூட, முதல் வேலையாக அதை வெளியேற்றிய பின்பு தான் பெருமூச்சு வரும்.
ஆனால் டெக்சாஸ் மாகாணத்தில் ஒருவர் வீட்டிற்குள் பாம்பு இருந்ததுக் கூட தெரியாமல் இருந்திருக்கிறார். அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல 45 விஷப் பாம்புகள்.
’அல்பனே க்ரவ்ள்டு பகுதியைச் சேர்ந்த வீட்டின் உரிமையாளர், கேபிளைச் செக் செய்யும் போது அங்கே சில நச்சுப் பாம்புகள் இருப்பதாக எங்களுக்கு தகவல் கொடுத்தார். அவற்றை வெளியேற்ற விரைந்து வரும்படியும் எங்களைக் கேட்டுக் கொண்டார்.
அதன்படி மதியா வேளையில் நாங்கள் அவரது வீட்டை அடைந்தோம். அவர் சொன்ன இடத்தைப் பார்த்த போது அங்கு சில நச்சுப் பாம்புகள் இல்லை, பல இருக்கின்றன என்பதை நாங்கள் உணர்ந்தோம்’ இப்படி ‘பிக் கண்ட்ரி ஸ்னேக் ரிமூவல்’ குழு தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, வீடியோவையும் ஷேர் செய்திருக்கிறது. இந்த வீடியோவை மில்லியன் கணக்கில் மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
மொத்தம் 45 விஷப் பாம்புகளை பத்திரமாகப் பிடித்து, ஆள் நடமாட்டம் இல்லாத ரிமோட் ஏரியாவில் விட்டிருக்கிறார்கள், பிக் கண்ட்ரி ஸ்னேக் ரிமூவல் குழுவினர்.
இந்த செய்தி டெக்சாஸில் வசிப்போரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.