Significant increase in presence of ISIL-K in Afghanistan and their capacity to carry out attacks: India tells UNSC: ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எல்-கே அமைப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது, மேலும், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் பிற பயங்கரவாத குழுக்களின் ஆத்திரமூட்டும் அறிக்கைகள் பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.
"பாதுகாப்பு கவுன்சிலில் நாங்கள் பலமுறை கூறியது போல, அண்டை நாடு மற்றும் ஆப்கானிஸ்தானின் நீண்டகால பங்காளி என்ற எங்கள் நிலைப்பாடு மற்றும் ஆப்கான் மக்களுடனான எங்கள் வலுவான வரலாற்று மற்றும் நாகரீக தொடர்புகளின் அடிப்படையில், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை திரும்புவதை உறுதி செய்வதில் இந்தியா நேரடி பங்குகளைக் கொண்டுள்ளது,” என்று ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் கூறினார்.
இதையும் படியுங்கள்: பாகிஸ்தானில் மழை வெள்ளத்தால் மக்கள் கடும்பாதிப்பு; குவியும் சர்வதேச உதவிகள்… உலகச் செய்திகள்
கவுன்சிலின் சீனத் தலைமையின் கீழ் ரஷ்யாவால் கோரப்பட்ட ஆப்கானிஸ்தான் பற்றிய UNSC மாநாட்டில் பயங்கரவாதம் குறித்து பேசிய ருசிரா காம்போஜ், 1988 தடைக் குழுவின் பகுப்பாய்வு ஆதரவு மற்றும் தடைகள் கண்காணிப்பு குழு அறிக்கையின் சமீபத்திய கண்டுபிடிப்புகள், ஆப்கானிஸ்தானில் உள்ள தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழிகளை நிறைவேற்ற மிகவும் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன என்று கோடிட்டுக் காட்டினார்.
“ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எல்-கே (இஸ்லாமிய அரசு - கொராசன் மாகாணம்) அமைப்பின் எண்ணிக்கையிலும், தாக்குதல்களை நடத்தும் திறனிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது. ஆப்கானிஸ்தானில் தளத்தைக் கொண்டு உள்ளதாகக் கூறப்படும் ஐ.எஸ்.ஐ.எல்-கே அமைப்பு, மற்ற நாடுகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது,” என்று ருசிரா காம்போஜ் கூறினார்.
காபூலில் ஜூன் 18 அன்று சீக்கிய குருத்வாராவில் நடந்த தாக்குதல் மற்றும் ஜூலை 27 அன்று அதே குருத்வாரா அருகே மற்றொரு குண்டுவெடிப்பு உட்பட சிறுபான்மை சமூகத்தின் மத ஸ்தலங்களில் தொடர் தாக்குதல்கள் "மிகவும் ஆபத்தானது" என்று ருசிரா காம்போஜ் கவுன்சிலில் கூறினார்.
”ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பட்டியலிடப்பட்டுள்ள லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற குழுக்களுக்கு இடையேயான தொடர்புகளும், ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் பிற பயங்கரவாத குழுக்களின் ஆத்திரமூட்டும் அறிக்கைகளும் பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளன,” என்று ருசிரா காம்போஜ் கூறினார்.
ருசிரா காம்போஜ் தனது உரையில், "இதுபோன்ற தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள், நிறுவனங்கள் அல்லது அவர்களின் மாற்றுப்பெயர்கள் ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்தோ அல்லது அப்பகுதியில் உள்ள பயங்கரவாத சரணாலயங்களில் இருந்தோ எந்தவிதமான ஆதரவையும், மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ பெறுவதில்லை" என்பதை உறுதி செய்வதில் உறுதியான முன்னேற்றம் காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அரசியல் முன்னணியில், ஆப்கானிஸ்தானில் அனைத்துப் பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உள்ளடக்கிய ஆட்சிக்கு இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதாக அவர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச ஈடுபாட்டிற்கு பரந்த அடிப்படையிலான, உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவ உருவாக்கம் அவசியம் என்று கூறிய ருசிரா காம்போஜ், பெண்கள் மற்றும் சிறுமிகளின் நல்வாழ்வை நேரடியாக பாதிக்கும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து இந்தியாவின் கவலையை வெளிப்படுத்தினார்.
"பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கடந்த இரண்டு தசாப்தங்களாக நீண்டகாலமாகப் போராடி பெற்ற உரிமைகள் திரும்பப் பெறப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கும் நாங்கள் மற்றவர்களுடன் இணைந்து கொள்கிறோம்" என்று இந்திய தூதர் கூறினார்.
மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கவுன்சிலில், ஆப்கானிஸ்தான் ஒரு மனிதாபிமான நெருக்கடி மட்டுமல்ல, “பொருளாதார நெருக்கடியும் ஆகும். இது ஒரு காலநிலை நெருக்கடி. இது ஒரு பசி நெருக்கடி. இது ஒரு நிதி நெருக்கடி. ஆனால் இது ஒரு நம்பிக்கையற்ற நெருக்கடி அல்ல.” ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களுக்கு உயிர்நாடியை வழங்க மனிதாபிமான அமைப்புகள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானில் 19 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர், இதில் 6 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் அபாயத்தில் உள்ளனர் என்று கிரிஃபித்ஸ் கூறினார். மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு, அதாவது சுமார் 24 மில்லியன் மக்களுக்கு, மனிதாபிமான உதவி தேவை.
1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டின் மிகக் கடுமையான, உயிருக்கு ஆபத்தான வடிவத்தால் பாதிக்கப்பட்டுள்ளது உட்பட, 3 மில்லியன் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். " சிறப்பு சிகிச்சை இல்லை என்றால், இந்த குழந்தைகள் இறக்கக்கூடும்," என்று கிரிஃபித்ஸ் கூறினார்.
சுமார் 25 மில்லியன் மக்கள் இப்போது வறுமையில் வாடுகின்றனர், மேலும் மக்களின் வருமானத்தில் முக்கால்வாசி உணவுக்காக செலவிடப்படுகிறது என்று ஐ.நா அதிகாரி கிரிஃபித்ஸ் கூறினார்.
“பணம் அனுப்பும் குடும்பங்களில் 50 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது; வேலையின்மை 40 சதவீதத்தை எட்டலாம்; மேலும் சர்வதேச விலை உயர்வு, இறக்குமதி தடைகள் மற்றும் பணமதிப்பிழப்பு காரணமாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது,” என்று கிரிஃபித்ஸ் கூறினார்.
"இவை புள்ளிவிவரங்கள் மற்றும் அவை பேரழிவை ஏற்படுத்துகின்றன, அவற்றை வெளிப்படையாக புரிந்துகொள்வது கடினம். அவை விரைவில் மோசமாகிவிடும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம். ஏற்கனவே அதிகமாக உள்ள உணவு மற்றும் எரிபொருள் விலைகள், குளிர் காலநிலை ஆரம்பித்தவுடன், விண்ணை முட்டும் அளவுக்கு உயரும். குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பது, பள்ளிக்கு அனுப்புவது, அவர்கள் நோய்வாய்ப்பட்டால் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது அல்லது சூடாக வைத்திருப்பது ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும், என்று கிரிஃபித்ஸ் கூறினார்.
ஆப்கானிஸ்தான் மக்களின் மனிதாபிமான தேவைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அவசர முறையீடுகளுக்கு பதிலளிக்கும் வகையில், இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு பல மனிதாபிமான உதவிகளை அனுப்பியுள்ளது என்று ருசிரா கம்போஜ் கவுன்சிலில் கூறினார்.
அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், காசநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் கொரோனா தடுப்பூசியின் 500,000 டோஸ்கள் அடங்கிய பத்து தொகுதிகளில் 32 டன் மருத்துவ உதவி இதில் அடங்கும்.
இந்த மருத்துவப் பொருட்கள் உலக சுகாதார அமைப்பு மற்றும் காபூலில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தியா இதுவரை 40,000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது. இந்தியாவின் கோதுமை உதவியின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக, ஆப்கானிஸ்தானுக்குள் கோதுமை விநியோகம் செய்வதற்கான உலக உணவுத் திட்டத்துடன் இந்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மேலும், மனிதாபிமான உதவிகளை திறம்பட வழங்குவதற்கான பல்வேறு பங்குதாரர்களின் முயற்சிகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் ஒருங்கிணைக்கவும் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களுடனான இந்தியாவின் ஈடுபாட்டைத் தொடர்வதற்காக, காபூலில் உள்ள எங்கள் தூதரகத்தில் இந்திய தொழில்நுட்பக் குழுவும் நிறுத்தப்பட்டுள்ளது, என்று ருசிரா காம்போஜ் கூறினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாதுகாப்பு கவுன்சிலின் இந்தியாவின் தலைமைத்துவத்தின் போது, UNSC தீர்மானம் 2593 ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று கம்போஜ் நினைவு கூர்ந்தார், இது சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளை தெளிவான மற்றும் புறநிலை அடிப்படையில் அமைக்கிறது.
மற்ற நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஆப்கானிஸ்தானின் பிரதேசம் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்தல்; உண்மையிலேயே உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவ அரசாங்கத்தை உருவாக்குதல்; பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுதல்; பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல், ஆகியவை இதில் அடங்கும்
"இந்த அளவுகோல்களை மனதில் கொண்டு, தற்போதைய நிலைமை உண்மையில் கவலைக்குரிய ஒன்றாகும்," என்று ருசிரா காம்போஜ் கூறினார்.
ஆப்கானிஸ்தானுக்கான இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் போல, அதன் வரலாற்று நட்பு மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களுடனான சிறப்பு உறவுகளால் வழிநடத்தப்படும் என்று ருசிரா கம்போஜ் மீண்டும் வலியுறுத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.