36 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவை தொடக்கம்

After 36 years flight service started from Chennai to Jaffna: 36 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இருந்து இலங்கை யாழ்பாணத்துக்கு நேரடி விமான...

After 36 years flight service started from Chennai to Jaffna: 36 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இருந்து இலங்கை யாழ்பாணத்துக்கு நேரடி விமான சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தரையிறங்கிய விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் 1940 ஆம் ஆண்டு பலாலி பகுதியில் ஆங்கிலேயர்கள் விமானப் படைத்தளம் அமைத்தனர். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தபின், பலாலி விமான நிலைய பயணிகள் போக்குவரத்து விமான நிலையமாக செயல்பட்டுவந்தது. அப்போது சென்னையிலிருந்து பலாலி வழியாக கொழும்புவுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. 1983 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் ஏற்பட்ட பின் பலாலி விமான நிலையம் மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இலங்கையில் 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த நிலையில், பலாலி விமான நிலையம் மிக மோசமாக சேதமடைந்திருந்ததால் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில், இலங்கை அரசு பலாலி விமான நிலையத்தை மறு கட்டமைப்பு செய்வதற்கும் வடக்கு மாகாணத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கை இந்தியாவுவிடம் குறிப்பாக தென் இந்தியாவிடம் கூட்டுறவில் நிதி உதவியை எதிர்பார்த்தது. இந்தியாவும் பலாலி விமான நிலையத்தை மேம்படுத்த உதவி செய்வதாக உறுதியளித்து இலங்கை அரசுக்கு நிதியும் அளித்தது. இலங்கை அரசு பலாலி விமான நிலையத்தை புனரமைப்பதற்காக ரூ.195 கோடியை ஒதுக்கீடு செய்தது. இந்திய அரசு ரூ.30 கோடி நிதியுதவி அளித்தது.

அதே நேரத்தில், யாழ்ப்பாணத்தில் பலாலியில் புலம்பெயா்ந்தவா்களை மீண்டும் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள் நடைபெற்று வந்ததால் விமான நிலையத்தை புனரமைக்கும் பணிகள் தாமதமானது. இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டிலிருந்து பலாலியை சுற்றி உள்ள நிலங்களை, புலம்பெயா்ந்தவா்கள் மீள்குடியேற்றம் செய்ய ராணுவம் விடுவிக்கத் தொடங்கியது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் பலாலி விமான நிலையம் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. அதோடு பலாலி விமான தளம் யாழ்ப்பாண சா்வதேச விமான நிலையமாக பெயா் மாற்றம் செய்யப்பட்டது.

விமான நிலையம் புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் அலையன்ஸ் ஏா் விமானம் அக்டோபர் 15 ஆம் தேதி சோதனை ஓட்டமாக சென்னையிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. மேலும், இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் ஆய்வு செய்தனர். யாழ்ப்பாண விமான நிலையப் பயணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், 36 ஆண்டுகளுக்குப் பின்னா் யாழ்ப்பாணம் விமான நிலையத்தினை இலங்கை அதிபா் மைத்ரிபால சிறிசேனா மற்றும் பிரதமா் ரணில் விக்ரமசிங்கே ஆகியோா் நேற்று திறந்து வைத்தனா்.

இதனைத் தொடர்ந்து, இன்று சென்னையிலிருந்து சென்ற அலையன்ஸ் ஏா் பயணிகள் விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்துக்கு தண்ணீா் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை, யாழ்ப்பாணம் இடையே வரும் நவம்பா் 1-ஆம் தேதியில் இருந்து வழக்கமான சேவை தொடங்கும் என்று அறிவிகப்பட்டுள்ளது.

மேலும், மதுரை, திருச்சி, மும்பை, திருவனந்தபுரத்தில் இருந்தும் விமானங்கள் இயக்கப்படும். சென்னை, யாழ்ப்பாணம் இடையே வாரத்தில் மூன்று நாள்களுக்கு விமானம் இயக்கப்படும் என்று அலையன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையம் மீண்டும் இயங்கியது இலங்கைத் தமிழா்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் இலங்கை விமான டிக்கெட்டுக்கு விதித்துள்ள வரி தொடர்பான பிரச்சினையை தீர்க்க முயற்சித்து வருகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு பயணம் செய்ய கட்டணம் ரூ.3,500 ஆக மாறும் என்ரு தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அலையன்ஸ் ஏர் தலைவர்-எம்.டி அஸ்வானி லோகானி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சி.எஸ்.சுப்பையா, சென்னை-யாழ்ப்பாணம் சுற்று பயணத்திற்கு சுமார் 4,000 ரூபாய் விமான டிக்கெட் கட்டணம் என்று கூறினார்.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை செல்லும் விமானத்தில் இலங்கை கொழும்பு புறப்பாட்டு வரியை ரூ.3,500 என விதித்துள்ளது. அதனால், யாழ்பாண பயணிகளுக்கு இந்த விமானப் பயண செலவு அதிகமாகிறது. இந்த பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்று தெரிவித்தனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil International News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close