/indian-express-tamil/media/media_files/2025/06/18/Israel-Iran Conflict-0144a8d5.jpg)
நிபந்தனையின்றி சரணடை டிரம்ப் எச்சரிக்கை: தொடங்கியது 'போர்' என ஈரான் சுப்ரீம் லீடர் முழக்கம்!
இஸ்ரேல்-ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதியிலே வெளியேறினார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் கரோலின் லீவிட் வெளியிட்ட பதிவில், "ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் கியெர் ஸ்டார்மருடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கைழுத்திட்டு உடனடியாக வெளியேறினார். மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தால், உச்சிமாநாட்டு பயணத்தை முடித்துவிட்டு வெள்ளை மாளிகைக்கு திரும்ப உள்ளார்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
இரு நாடுகளும் தாக்குதலை தொடருவதால் ஈரான் தலைநகா் தெஹ்ரானில் இருந்தும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தும் மக்கள் வெளியேற வேண்டும் என்று இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்திருந்தது மட்டுமின்றி, ஈரானை அமெரிக்காவும் தாக்க வேண்டும் என்று இஸ்ரேல் கோரிக்கை வைத்திருந்தது.
ஈரானின் போர்க்கால தலைமை தளபதியாக அடையாளம் காணப்படும் மூத்த ராணுவ தளபதியான அலி ஷத்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்திய இஸ்ரேலிய ராணுவ செய்தி தொடர்பாளர், தெஹ்ரானில் வைத்து அலி ஷத்மானி கொல்லப்பட்டதாகவும், அவர் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா கமெனிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஈரான் சுப்ரீம் லீடர் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் இணையதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஈரானின் சுப்ரீம் லீடர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவரை கொல்ல இப்போதைக்கு திட்டம் தீட்டவில்லை. எவ்வித நிபந்தனையுமின்றி சரணடைவதே சிறந்த தீர்வு. அமெரிக்காவின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பொதுமக்கள் மற்றும் அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஈரானின் வான்வெளி எங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்கள் வந்துள்ளது. ஈரானிடம் நல்ல ஸ்கை டிராக்கர்கள் மற்றும் பிற தற்காப்பு உபகரணங்கள் ஏராளமாக இருந்தன. ஆனால் அது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, பொருட்களுடன் ஒப்பிட முடியாது. அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களைவிட ஈரானின் ஆயுதங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இவ்வாறு அதில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் மிரட்டலுக்கு ஈரானின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனி எக்ஸ்தளத்தில் "உன்னதமான ஹைதரின் பெயரால், போர் தொடங்குகிறது" என்று எச்சரித்துள்ளார்.
டிரம்பின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஈரான் கடும் பதிலடி கொடுக்கும் என்று தனது கருத்தை மீண்டும் அயதுல்லா அலி கமேனி குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.