scorecardresearch

உக்ரைன் மருத்துவமனையில் ரஷ்யா விமான தாக்குதல்; 17 பேர் படுகாயம்

தாக்குதலை அதிகரித்த ரஷ்யா, உக்ரைன் மகப்பேறு மருத்துவமனையில் விமான தாக்குதல்; 17 பேர் படுகாயம் என உக்ரைன் தகவல்

AP

Airstrike hits Ukraine maternity hospital, 17 reported hurt: ரஷ்யாவின் ராணுவத் தாக்குதல் இன்னும் மிருகத்தனமான மற்றும் கண்மூடித்தனமான திருப்பத்தை எடுக்கப் போகிறது என்ற மேற்கு நாடுகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியில், முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையை ரஷ்ய விமானத் தாக்குதல் புதன்கிழமை அழித்தது. இந்த தாக்குதலில் குறைந்தது 17 பேர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரியுபோல் மருத்துவமனை வளாகம் தொடர்ச்சியான குண்டுவெடிப்புகளால் தாக்கப்பட்டபோது, ​​​​ஒரு மைல் தொலைவில் நிலம் அதிர்ந்தது, அது ஜன்னல்களை வெடிக்கச் செய்தது மற்றும் ஒரு கட்டிடத்தின் முன்பக்கத்தின் பெரும்பகுதி சேதமடைந்தது. காவல்துறையினரும் பாதுகாப்பு படையினரும் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றுவதற்கு சம்பவ இடத்திற்கு விரைந்தனர், கனமான கர்ப்பிணி மற்றும் இரத்தப்போக்கு கொண்ட ஒரு பெண்ணை ஸ்ட்ரெச்சரில் ஏற்றிக்கொண்டு, குண்டுவெடிப்பால் எரியும் மற்றும் சிதைந்த கார்கள் மற்றும் மரங்களுக்கு மத்தியில் வெளியேற்றினர்.

இன்னொரு பெண் தன் குழந்தையைப் பிடித்துக் கொண்டு அழுதாள். முற்றத்தில், ஒரு குண்டு வெடிப்பால் ஏற்பட்ட பள்ளம் குறைந்தது இரண்டு மாடிகள் ஆழத்திற்கு இருந்தது.

“இன்று ரஷ்யா ஒரு பெரிய குற்றத்தைச் செய்துள்ளது,” “இது எந்த நியாயமும் இல்லாமல் ஒரு போர் குற்றம்.” என்று இடிபாடுகளில் நின்றுகொண்டிருந்த உயர்மட்ட பிராந்திய காவல்துறை அதிகாரி விளாடிமிர் நிகுலின் கூறினார்.

ரஷ்ய தாக்குதலால் குழந்தைகளும் மற்றவர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கியதாக அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.

“குழந்தைகளுக்கான மருத்துவமனை. ஒரு மகப்பேறு மருத்துவமனை தாக்கப்பட்டுள்ளது. அவர்கள் ரஷ்ய படையை எவ்வாறு அச்சுறுத்தினார்கள்? என்று அதிபர் ஜெலென்ஸ்கி தனது இரவு நேர வீடியோ பதிவில் கேள்வி எழுப்பினார். மேலும், “ரஷ்யா என்ன வகையான நாடு, மருத்துவமனைகளுக்கு பயந்து, மகப்பேறு மருத்துவமனைகளுக்கு பயந்து, அவற்றை அழிக்கிறது?” என்றும் கேட்டார்.

பின்னர் உக்ரைன் அதிபர், மேற்கு நாடுகளை இன்னும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு வலியுறுத்தினார், இதனால் ரஷ்யா “இனி இந்த இனப்படுகொலையைத் தொடர எந்த வாய்ப்பும் இல்லை.” என்று கூறினார்.

ஜெலென்ஸ்கி பகிர்ந்த வீடியோ, அழகிய வர்ணம் பூசப்பட்ட கட்டிடங்கள், தாக்குதலால், உலோக கம்பிகள் தெரியும் வகையில் உருக்குலைந்த நிலையில் இருப்பதைக் காட்டியது.

“பாதிக்கப்படக்கூடிய மற்றும் பாதுகாப்பற்றவர்களை குறிவைப்பதை விட மோசமான சில விஷயங்கள் உள்ளன” என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ட்வீட் செய்துள்ளார். மேலும் அந்த ட்வீட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் “அவரது கொடூரமான குற்றங்களுக்கு பொறுப்பேற்கப்படுவார்” என்றும் பதிவிட்டுள்ளார்.

யுத்தம் தொடங்கியதில் இருந்து சுகாதார வசதிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மீது 18 தாக்குதல்கள் நடத்தப்பட்டு 10 பேர் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கையில் மகப்பேறு மருத்துவமனை மீதான தாக்குதலும் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி ஜே. பிளிங்கன் ரஷ்யாவின் “மனசாட்சியற்ற தாக்குதல்” கண்டிக்கத்தக்கது என்று தனது உக்ரேனியப் பிரதிநிதி டிமிட்ரோ குலேபாவுடனான தொலைப்பேசி அழைப்பில் கூறினார். இந்த தொலைப்பேசி அழைப்பு படையெடுப்பைத் திரும்பப் பெறுவதற்கான இராஜதந்திர முயற்சிகளையும் உள்ளடக்கியது என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இரண்டு வாரங்களாக நடந்து வரும் நிலையில், உக்ரைன் ராணுவம் எதிர்பார்த்ததை விட அதிகமாக போராடுகிறது, ஆனால் 150,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களைக் கொண்ட புதினின் படையெடுப்பு படை முக்கிய நகரங்களைத் தாங்கிக்கொள்வதால், ஃபயர்பவரில் சாத்தியமான சமாளிக்க முடியாத நன்மைகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

கார்கிவ் மற்றும் மைகோலேவ் நகரங்களில் ரஷ்ய முன்னேற்றம் தவிர, மக்கள்தொகை நிறைந்த பகுதிகளில் அடிக்கடி கடுமையான ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும், அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கடந்த 24 மணிநேரத்தில் களத்தில் சிறிய மாற்றங்கள் மட்டும் இருப்பதாக தெரிவித்தனர். பெரிய இராணுவ நிலைமையை மதிப்பிடுவதற்கு பெயர் வெளியிட விரும்பாத நிலையில் அந்த அதிகாரிகள் பேசினர்.

மரியுபோல், எனர்ஹோடார் மற்றும் வோல்னோவாகா நகரங்கள், கிழக்கில் இஸியம் மற்றும் வடகிழக்கில் சுமி நகரங்கள் மற்றும் கீவ்வைச் சுற்றியுள்ள குண்டுவீச்சு நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தப்பிக்க புதிய போர்நிறுத்தங்களை அதிகாரிகள் புதன்கிழமை அறிவித்தனர்.

மற்ற நகரங்களில் உள்ளவர்கள் அங்கிருந்து வெளியேற முடியுமா என்பது உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் தலைநகர் கீவ்வில் குண்டு வெடிப்புகள் தொடரும் நிலையிலும், வான்வழித் தாக்குதல் சைரன்கள் மீண்டும் மீண்டும் ஒலித்ததாலும், மக்கள் கீவ்வின் புறநகர்ப் பகுதிகளிலிருந்து வெளியேறினர், பலர் நகரத்தின் மைய பகுதிக்குச் சென்றனர்.

அங்கிருந்து, வெளியேற்றப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகாத மேற்கு உக்ரேனிய பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் ஏற திட்டமிட்டனர்.

கீவ் புறநகர் பகுதியான இர்பினிலிருந்து வெளியேறும் பொதுமக்கள், ஒரு தற்காலிக பாலத்தின் வழுக்கும் மரப் பலகைகளைக் கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஏனெனில் உக்ரேனியர்கள் ரஷ்ய முன்னேற்றத்தை தடுப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு கீவ்க்கு செல்லும் கான்கிரீட் பாலத்தை வெடிக்கச் செய்தனர்.

அவர்களுக்குப் பின்னால் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு எதிரொலித்த போதும், தீயணைப்பு வீரர்கள் ஒரு முதியவரை ஒரு சக்கர வண்டியில் பாதுகாப்பாக கொண்டுச் சென்றனர், ஒரு குழந்தை உதவி செய்யும் சிப்பாயின் கையைப் பிடித்தப்படி நின்றது, மேலும் ஒரு பெண் தனது குளிர்கால கோட்டின் உள்ளே பஞ்சுபோன்ற பூனையைத் தொட்டுக்கொண்டு தன் வழியில் சென்றாள். விபத்துக்குள்ளான வேனின் ஜன்னல்களில் படித்திருந்த தூசியில் “எங்கள் உக்ரைன்” என்று எழுதப்பட்டிருந்த வேனை அவர்கள் கடந்து சென்றனர்.

உக்ரைனின் பிராந்திய பாதுகாப்புப் படைகளின் உறுப்பினரான Yevhen Nyshchuk கூறுகையில், “தற்போது எங்களுக்கு ஒரு குறுகிய நேரமே உள்ளது. “இப்போது போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், எந்த நேரத்திலும் குண்டுகள் விழும் அபாயம் அதிகம்.” என்றார்.

உக்ரேனியர்கள் ரஷ்ய தாக்குதல்கள் தொடர்கிறது என்று கூறியதன் காரணமாக கடந்த சில நாட்களாக பாதுகாப்பான வெளியேற்றும் வழித்தடங்களை நிறுவுவதற்கான முந்தைய முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைந்தன. ஆனால் புதின், ஜெர்மனியின் அதிபருடனான தொலைபேசி அழைப்பில், போராளி உக்ரேனிய தேசியவாதிகள் வெளியேற்றத்திற்கு இடையூறு விளைவிப்பதாக குற்றம் சாட்டினார்.

அசோவ் கடலில் 430,000 மக்கள் வசிக்கும் முக்கிய நகரமான மரியுபோலில், கடந்த இரண்டு வாரங்களாக சண்டையிட்டு இறந்தவர்களை பெரிய குழியில் அடக்கம் செய்ய உள்ளூர் அதிகாரிகள் விரைந்தனர். நகரப் பணியாளர்கள் நகரின் பழைய கல்லறை ஒன்றில் சுமார் 25 மீட்டர் (கெஜம்) நீளத்திற்கு பள்ளம் தோண்டி, தரைவிரிப்புகள் அல்லது பைகளில் சுற்றப்பட்ட உடல்களை குழிக்குள் தள்ளும்போது சிலுவையின் அடையாளத்தை உருவாக்கி ஜெபித்தனர்.

நகரின் ஒன்பது நாள் முற்றுகையில் சுமார் 1,200 பேர் இறந்துள்ளனர் என்று ஜெலென்ஸ்கியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய படைகள் படையெடுத்ததில் இருந்து நாடு முழுவதும், பொதுமக்கள் மற்றும் வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக கருதப்படுகிறது. 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஐநா மதிப்பிட்டுள்ளது, இது இரண்டாம் உலகப் போரின் முடிவுக்கு பின்னர், ஐரோப்பாவில் அகதிகளின் மிகப்பெரிய வெளியேற்றம் ஆகும்.

இந்த சண்டையானது செயலிழந்த செர்னோபில் அணுமின் நிலையத்திற்கான மின்சாரத்தை துண்டித்தது, இது அந்த இடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பயன்படுத்தப்பட்ட கதிரியக்க எரிபொருளைப் பற்றிய அச்சத்தை எழுப்பியுள்ளது. ஏனெனில் அவை, குளிர்ச்சியான நிலையில் இருக்க வேண்டும். ஆனால் ஐநா அணுசக்தி கண்காணிப்பு நிறுவனம், மின்சார இழப்பால் “பாதுகாப்பில் எந்த முக்கிய தாக்கத்தையும்” காணவில்லை என்று கூறியது.

உக்ரேனிய எதிர்ப்பு வலுவாக இருப்பதாகவும், எதிர்பார்த்ததை விட அதிக ரஷ்ய இழப்புகள் இருப்பதாகவும் தோன்றும் நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைன் நகரங்கள் மீது குண்டுவீச்சை அதிகரிப்பதால், நெருக்கடி இன்னும் மோசமாகும்.

இதையும் படியுங்கள்: செர்னோபில் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் – உக்ரைன் எச்சரிக்கை

ஒரு நாள் முன்னதாக சிஐஏ இயக்குனரின் கருத்துக்களை எதிரொலிக்கும் வகையில், புதின் தாக்குதலை மீண்டும் அதிகரிக்க முயற்சிக்கும் போது ரஷ்யாவின் தாக்குதல் “மிகவும் மிருகத்தனமாகவும் கண்மூடித்தனமாகவும்” மாறும் என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறினார்.

கீவ்வின் வடமேற்கே சண்டை தொடர்வதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கார்கிவ், செர்னிஹிவ், சுமி மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்கள் ரஷ்யப் படைகளால் கடுமையாகச் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

ரஷ்யப் படைகள் வடக்கு நகரமான செர்னிஹிவில் பண்ணைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு மத்தியில் இராணுவ உபகரணங்களை வைக்கின்றன என்று உக்ரைனின் இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், தெற்கில், அரை மில்லியன் மக்கள் வசிக்கும் கருங்கடல் கப்பல் கட்டும் மையமான மைகோலேவ் நகரத்தில் சிவிலியன் உடையில் ரஷ்யர்கள் முன்னேறி வருகின்றனர் என்றும் உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.

இதற்கிடையில், உக்ரேனிய இராணுவம் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள நகரங்களில் பாதுகாப்பைக் கட்டியெழுப்புகிறது, மேலும் கீவ்வைச் சுற்றியுள்ள படைகள் ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக “பாதுகாப்பு அரணைக் கொண்டிருக்கின்றன” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதன்கிழமை, உக்ரைனின் தன்னார்வப் போராளிகள் சிலர் கீவ் பூங்காவில் ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகளுடன் பயிற்சி பெற்றனர்.

“எனக்கு ஒரே ஒரு மகன் இருக்கிறார்,” என்று 64 வயதான ஓய்வுபெற்ற தற்காப்புக் கலை பயிற்சியாளரான மைகோலா மட்டுலெவ்ஸ்கி கூறினார், அவர் தனது மகன் கோஸ்ட்யாண்டினுடன் இருந்தார். “எனக்கு எல்லாமே என் மகன் தான்” என்றார்.

ஆனால் இப்போது அவர்கள் ஒன்றாகப் போராடுகிறார்கள்: “எங்கள் தாய்நாடு என்பதால் அதை வேறு வழியில் பெறுவது சாத்தியமில்லை. முதலில் நாம் நமது தாய்நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

60,000 பேர் வசிக்கும் நகரமான இர்பினில், முதியோர்கள் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற போலீஸ் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உதவினார்கள். ஒரு நபர் ஒரு தற்காலிக ஸ்ட்ரெச்சரில் சேதமடைந்த கட்டமைப்பிலிருந்து தூக்கி வரப்பட்டார், மற்றொருவர் ஒரு வணிக வண்டியில் கீவ் நோக்கி அனுப்பப்பட்டார். கடந்த 4 நாட்களாக மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் தவிப்பதாக அங்கிருந்து வெளியேறிய மக்கள் தெரிவித்தனர்.

பிராந்திய நிர்வாகத் தலைவர் Oleksiy Kuleba, கீவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கான நெருக்கடி அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறினார்.

மேலும், “ரஷ்யா செயற்கையாக கீவ் பிராந்தியத்தில் ஒரு மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கி, மக்களை வெளியேற்றுவதில் விரக்தியை ஏற்படுத்துகிறது மற்றும் சிறிய சமூகங்கள் மீது ஷெல் மற்றும் குண்டுவீச்சு தொடர்கிறது,” என்றும் அவர் கூறினார்.

ரஷ்ய தாக்குதல்கள் தொடர்வதால், மரியுபோலில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது, அங்கு வசிப்பவர்களை வெளியேற்றுவதற்கும் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை வழங்குவதற்குமான முயற்சிகள் செவ்வாயன்று தோல்வியடைந்தன, என்று உக்ரைன் கூறியது.

புதன்கிழமை ஷெல் வீச்சில் ஏற்பட்ட அமைதியை சாதகமாக பயன்படுத்தி 70 பேரை அவசரமாக புதைத்தது நகரம். இறந்தவர்களில் சிலர் வீரர்கள், ஆனால் பெரும்பாலானோர் பொதுமக்கள்.

புதைக்கும் பணி வேகமாகவும், இறுதிச் சடங்குகள் இன்றியும் நடத்தப்பட்டது. துக்கம் அனுசரிப்பவர்கள் யாரும் இல்லை, அவர்களுக்கு கண்ணீர் விட குடும்பங்கள் இல்லை.

அடக்கம் செய்யப்பட்டவர்களில் தன் தாயும் இருக்கிறாரா என்று கேட்க ஒரு பெண் கல்லறையின் வாயிலில் நின்றாள். இறந்தவர்களில் அவளின் தாயும் இருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Airstrike hits ukraine maternity hospital

Best of Express