இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, சிறையில் அடைக்கப்பட்ட பெலாரஸ் உரிமை ஆர்வலர் அலெஸ் பியாலியாட்ஸ்கி மற்றும் ரஷ்ய குழு மெமோரியல் மற்றும் உக்ரேனிய சிவில் லிபர்டீஸ் அமைப்பு மையம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை நார்வே நோபல் கமிட்டியின் தலைவரான பெரிட் ரெய்ஸ் ஆண்டர்சன் வெள்ளிக்கிழமை (அக்.07) ஒஸ்லோவில் அறிவித்தார்.
ஒரு வாரம் நடைபெறும் நோபல் பரிசு அறிவிப்புகள் திங்கள்கிழமை தொடங்கின. அப்போது, நியாண்டர்டால் டிஎன்ஏவின் ரகசியங்களை கண்டுபிடித்த விஞ்ஞானிக்கு மருத்துவ விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து, சிறிய துகள்கள் பிரிக்கப்பட்டாலும் ஒன்றோடொன்று தொடர்பைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதைக் காட்டியதற்காக மூன்று விஞ்ஞானிகள் செவ்வாய்க்கிழமை இயற்பியலுக்கான பரிசை வென்றனர்.
அதிக இலக்கு மருந்துகளை வடிவமைக்கப் பயன்படும் மூலக்கூறுகளை இணைக்கும் வழிகளை உருவாக்கிய மூன்று விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான பரிசு புதன்கிழமை வழங்கப்பட்டது.
தொடர்ந்து,
பிரெஞ்சு எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ் இந்த ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வியாழக்கிழமை வென்றார்.
அந்த வகையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த விருது கடந்த காலங்களில் மோதல்களைத் தடுக்கவும், கஷ்டங்களைத் தணிக்கவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் முயற்சிக்கும் குழுக்கள் மற்றும் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதேபோல், 2022ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு திங்கள்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. இந்த பரிசுகள் 10 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (கிட்டத்தட்ட USD 900,000) ரொக்கப் பரிசைக் கொண்டுள்ளன,
பரிசுகள் டிசம்பர் 10ஆம் தேதியன்று வழங்கப்படும். இந்தப் பரிசுத் தொகை1895 முதல் ஆல்பிரட் நோபல் விட்டுச் சென்ற சொத்துக்களில் இருந்து வழங்கப்படுகிறது.
நோபல் பரிசை பொறுத்தவரை அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், இதர பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் வழங்கப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“