அமேசான் நிறுவனம், பேக்கேஜிங் பிரிவில் உள்ள ஊழியர்கள், தங்கள் வேலையை ராஜினாமா செய்தால் இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங் சேவை வழங்குவதில், சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள நிறுவனம் அமேசான் நிறுவனம். இந்நிறுவனம், யாரும் அவ்வளவு எளிதாக செல்லமுடியாத இடங்களிலும் சென்று வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்துவருகிறது. அமேசான் நிறுவனம், பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு ஆன்லைன் வர்த்தகத்தில் முடிசூடா மன்னனாக விளங்குகிறது.
இந்நிலையில், மக்களுக்கு அதிகளவிலும் அதேநேரம் விரைவாகவும் பொருட்களை டெலிவரி செய்யும் பொருட்டு தனது செயல்பாடுகளை நவீனமாக்கி வருகிறது. பேக்கேஜிங் பிரிவில் அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தும் நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளது. இதற்காக அதிக மதிப்பிலான அதிநவீன இயந்திரங்களை அமேசான் களமிறக்கியுள்ளது. ஒருமணிநேரத்திற்கு 700 பெட்டிகள் வரையிலான பொருட்களை இந்த இயந்திரம் பேக்கேஜிங் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இயந்திரங்களின் வரவால், பேக்கேஜிங் பிரிவில் அதிகளவில் ஊழியர்கள் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அமேசான் நிறுவனம் ஒரு பலே திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, பேக்கேஜிங் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள், தங்கள் வேலையை ராஜினாமா செய்தால், அவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம் வழங்கப்படுவதுடன் 3 மாத சம்பளமும், அவர்கள் சுயதொழில் செய்வதற்கான பயிற்சியும் வழங்கப்படும் என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. அமேசானின் இந்த அறிவிப்பை ஏற்று, பல ஊழியர்கள் தங்கள் வேலையை கைவிடமுடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விரைவான பேக்கேஜிங், புதிய பரிணாமத்தில் டெலிவரி என புதிய அணுகுமுறைகளால் பொருட்களை மிக விரைவாக வாடிக்கையாளர்களிடம் சேர்த்துவிடலாம் என அமேசான் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.