சந்திரன் ஆர்
அமெரிக்க அதிபர் டிரம்பின் போக்கினால், அமெரிக்காவுக்கு வேலை தேடி வரும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், கடந்த சில ஆண்டுகளில் இந்த போக்கு பெரும் சரிவு கண்டுள்ளதாகவும் அமெரிக்காவில் உள்ள செய்தித்தாள்கள் மற்றும் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் உள்ள பெரும் நிறுவனங்களிலும், ஐடி தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கு இந்தியா மற்றும் சீனா போன்ற நாட்டை சேர்ந்தவர்களே அதிகம் விரும்பப்படுகின்றனர். ஒருபுறம் இவர்கள் சிரத்தையுடன் பங்காற்றுகின்றனர் என்பது மட்டுமின்றி, இவர்களுக்கான ஊதியமும், சமதகுதி கொண்ட அமெரிக்கர்களுக்கு தர வேண்டியிருப்பதை விட குறைவு என தெரிய வருகிறது. இதனால், உள்ளூர் ஆட்களை வேலைக்கு வைப்பதைவிட வெளிநாட்டவரே சிறப்பு என அங்குள்ள நிறுவனங்கள் கருதுவதாக சிலிக்கான் வேலியில் இருந்து வெளியாகும் சான் பிரான்ஸிஸ்கோ கிரானிக்கல் செய்தி வெளியிட்டுள்ளது.
2017ம் ஆண்டு அமெரிக்கா வேலை வாய்ப்பு சந்தையில் கவர்ச்சி இழக்கத் தொடங்கியது. அது 2018ம் ஆண்டிலும் தொடர்கிறது என அந்நாட்டு நிறுவனங்கள் சார்பில் சொல்லப்படுகிறது. "கடந்த 13வது மாதமாக தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள காலியிடத்துக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது" என அந்நாட்டு வேலை வாய்ப்பு ஏற்பாட்டு நிறுவனமான இன்டீட் ஹயரிங் லேப்-பில் பணியாற்றும் டேனியல் கல்பர்ட்ஸன் தெரிவித்துள்ளார்.