Australian man drinks the most expensive beer: மான்செஸ்டரில் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவர் தான் குடித்த பீர் பாட்டிலுக்காக அவரது கணக்கில் இருந்து 99,983.64 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 71 லட்சம்) கழிக்கப்பட்டபோது அதிர்ச்சி அடைந்தார்.
நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முன்னால், தி ஆஸ்திரேலியன் கிரிக்கெட் எழுத்தாளர் பீட்டர் லாலோர், ஒரு மால்மைசன் ஹோட்டலில் டீச்சர்ஸ் ஐபிஏ பாட்டிலை ஆர்டர் செய்துள்ளார். இருப்பினும், அந்த பீர் சுமார் 6.75 டாலர் விலை இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில், அந்த பீர் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த பீர் என்ற நிலைக்கு சென்றுள்ளது. இது குறித்து பிபிசி செய்தியில், ஹோட்டல் செய்தித் தொடர்பாளர் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியதாகவும், இந்த பில்லிங் பிழையை விசாரிப்பதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து லாலோர் தனது டுவிட்டர் பக்கத்தில் பீர் பாட்டிலின் படத்தைப் பகிர்ந்து, “இந்த பீரை பார்க்கிறீர்களா? இது வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த பீர் ஆகும். மான்செஸ்டரில் உள்ள மால்மைசன் ஹோட்டலில் 99,983.64 டாலர் செலுத்தினேன். உண்மையாகத்தான்” என்று பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த சம்பவம் பற்றி விளக்கி அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “அந்த பெண் பீருக்கான பில் கொண்டுவந்தபோது நான் படிப்பதற்கான எனது கண்ணாடியை எடுக்கவில்லை. அப்போது அந்த பெண்ணின் இயந்திரத்தில் சில சிக்கல்கள் இருந்தது நான் அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. ஆனால், இறுதியில் அது சரிசெய்யப்பட்டது. அதனால், எனக்கு ரசீது தேவையில்லை என்று கூறினேன். இதையடுத்து அந்த பெண் வெளியே சென்றாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஏதோ சரியாக இல்லை என்பதை உணர்ந்த அவர், தனது பில்லை படிக்குமாறு பார் உதவியாளரைக் கேட்டுக்கொண்டார். “ஏதோ என்னிடம் கேட்க, நான் அந்த பீருக்கு எவ்வளவு பணம் கொடுத்தேன்?” என்று கேட்டேன். அவள் சரிபார்த்துவிட்டு வாயை மூடிக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள். பிறகு அவள் என்னிடம் சொல்ல மறுத்துவிட்டாள், ஒரு தவறு நடந்திருப்பதாகவும் அவள் அதை சரிசெய்வதாகவும் கூறினாள்”
மேலும், பீருக்கான தொகை கூறப்பட்டவுடன், லாலோர் பார் உதவியாளரை உடனடியாக சரிசெய்யுமாறு வலியுறுத்தினார். “இப்போது அதை சரி செய்ய வேண்டும் என்று அந்த பெண்ணிடம் சொன்னேன். நிலைமையை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டு தனது மேலாளரைப் பார்க்க அவள் ஓடினாள். பணத்தைத் திரும்பப் அளிக்க முயற்சி செய்கிறார்.
யாராவது தொடர்பு கொள்வார்கள் என்று அந்த பெண் என்னிடம் கூறினார். மூன்று நாட்கள் ஆகிவிட்டது நான் இன்னும் காத்திருக்கிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.
தவறாக கட்டணம் வசூலிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், லாலோர் ஒரு பரிவர்த்தனைக் கட்டணத்தையும் செலுத்தியுள்ளார். “மேலும், அவமானம் சேர்க்கும்விதமாக அவர்கள் 2,499 டாலர் பரிவர்த்தனை கட்டணம் வசூலித்தனர். பணம் திரும்பி வரும் வரை நான் எளிதாக அமைதியாக இருக்க மாட்டேன்.”என்று அவர் ஒரு செய்தி இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.