உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத அமைப்பு அல் கொய்தா. பல பயங்கரவாத தாக்குதல்கள், சதி செயல்களை இந்த அமைப்பு செய்து வருகிறது. இந்த அமைப்பை நிறுவிய மற்றும் பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டு வந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்க படையினர் கடந்த 2011ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில், இந்த அமைப்பின் தலைவராக இருந்த வந்த அய்மன் அல்-ஜவாஹிரியை அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் சுட்டுக் கொன்றதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உத்தரவின் பேரில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் காபூலில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அல்-ஜவாஹிரியை காபூலில் உள்ள அவரது வீட்டின் பால்கனியில் வைத்து காலை 7.18 மணியளவில் சுட்டுக் கொன்றதாக அமெரிக்க அலுவலகத்தின் மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதல் குறித்து உறுதிப்படுத்திய ஜோ பைடன், “எனது வழிகாட்டுதலின் பேரில் ஆப்கானிஸ்தானின் காபூலில் அமெரிக்கா வெற்றிகரமாக வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி சுட்டுக் கொல்லப்பட்டார். நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
“ஜவாஹிரி தொடர்ந்து அமெரிக்காவின் நலன், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தார். அவரது மரணம் அல் கொய்தாவிற்கு பெரிய அடியாகவும், செயல்பாட்டின் திறனைக் குறைக்கும்” என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டுகளில் அமெரிக்கா மீது அல்-கொய்தா தாக்குதல் நடத்தியது. கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள யுஎஸ்எஸ் கோல் மற்றும் அமெரிக்க தூதரகங்களை அல்-கொய்தா தாக்கியது. இதில் பலர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 12, 2000 அன்று யேமனில் உள்ள யுஎஸ்எஸ் கோல் கடற்படைக் கப்பல் மீது அல்-கொய்தா தாக்குதல் நடத்தியது. இதில் 17 அமெரிக்க மாலுமிகள், 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
ஆகஸ்ட் 7, 1998 இல், கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது குண்டுவீசி அல்-கொய்தா தாக்குதல் நடத்தியது. இதில் 224 பேர் கொல்லப்பட்டனர். 5,000 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அமெரிக்கா மீது அல்-கொய்தா நடத்திய தாக்குதலுக்கு ஜவாஹிரி மூளையாக இருந்ததாகவும், முக்கிய பங்கு வகித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அய்மன் அல்-ஜவாஹிரியை அமெரிக்கா சுட்டுக் கொன்றதாக அறிவித்துள்ளது.