இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு அபாய எச்சரிக்கை வந்ததை அடுத்து, இந்தோனேசியா பாலியில் இருக்கும் இந்தியர்களுக்கு உதவி கரம் நீட்டியுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
தனிப்பட்ட முறையில் பாலியில் சூழலை கண்காணிப்பதாகவும், அங்கு இருக்கும் இந்தியர்களுக்கு இந்தியா உதவும் என அவர் தெரிவித்தார். சுஷ்மா ஸ்வராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில், “பாலியில் உள்ள இந்தியர்கள் கவலைப்பட வேண்டாம். ஜகர்த்தாவில் உள்ள இந்திய தூதர் பிரதீப் ரவாத் மற்றும் சுனில்பாபு பாதுகாப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தனிப்பட்ட முறையில் நான் கவனிக்கிறேன்” என அவர் ட்வீட் செய்து இருந்தார்.
பாலியில் உள்ள இந்திய பொது தூதரகம் விமான நிலையத்தில் உதவிக் கூடாரம் அமைத்துள்ளது. சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது மாடியில் காலை 9 முதல் இந்த உதவி மையம் செயல் தொடங்கும் என ட்வீட் மூலம் தகவல்களை தெரிவித்துள்ளார்.
பாலியில் உள்ள மவுண்ட் அகுங் எரிமலை கடந்த சில நாட்களாக கொப்பளித்துக் கொண்டிருக்கிறது. 3,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல்கள் வெடித்து சிதறுகிறது. இதனையொட்டி இந்தோனேசிய அரசு பாலி சுற்றியுள்ள கிராமங்களை காலி செய்யும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கடந்த இரு நாட்களாக விமான நிலையம் மூடி வைக்கப்பட்டு, சுற்றுலாவுக்கு சென்றவர்கள் திரும்ப வர முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இந்த எரிமலை வெடிப்பு 12 கி.மீ வரை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.