கடந்த 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்கதேசம் தனி நாடாக பிரிந்தது. இந்த போரில் உயிர் தியாகம் செய்தோர் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளுக்கு அந்நாட்டு அரசு வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2018-ல் நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து இந்த இடஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Bangladesh Protests Live Updates
இந்நிலையில், இந்த 30 சதவீதம் இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான வங்கதேச அரசு அறிவித்தது. இதை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் கடந்த ஜூலை 19, 20 அன்று போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தின் போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 300 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை வங்கதேச அரசு அறிவித்த நிலையில், ஆளும் அவாமி லீக் அரசின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக மோதல் ஏற்பட்டது. அரசுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் உள்பட 100 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர்.
தப்பியோடிய பிரதமர் - ராணுவ ஆட்சி அமல்
புதிய வன்முறையைத் தொடர்ந்து, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று திங்கள்கிழமை ராஜினாமா செய்ததாக டெல்லியில் உள்ள வங்கதேச உயர் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டு மொழி நாளிதழ்களின் செய்திகளின்படி, பிரதமர் ஷேக் ஹசீனா தனது சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். நாட்டின் ராணுவத் தளபதி வக்கர்-உஸ்-ஜமான் இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டது.
இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் ராணுவத் தளபதி வக்கர்-உஸ்-ஜமான், வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வருவதாகவும், ராணுவம் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
யார் இந்த வக்கர்-உஸ்-ஜமான்?
வங்கதேச ராணுவத் தளபதியான வக்கர்-உஸ்-ஜமான் 1966 இல் டாக்காவில் பிறந்தார். இவர் 1997 முதல் 2000 வரை ராணுவத் தலைவராக இருந்த ஜெனரல் முஹம்மது முஸ்தாபிசுர் ரஹ்மானின் மகள் சரஹ்னாஸ் கமாலிகா ஜமானை மணந்தார்.
வக்கர்-உஸ்-ஜமான் வங்கதேச தேசிய பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புப் படிப்பில் முதுகலைப் பட்டமும், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் பாதுகாப்புப் படிப்பில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார் என்று வங்கதேச ராணுவ இணையதளம் தெரிவித்துள்ளது.
வக்கர்-உஸ்-ஜமான் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன், ஜமான் ஆறு மாதங்களுக்கும் மேலாக பொதுப் பணியாளர்களின் தலைமைத் தளபதியாக பணியாற்றினார். அதில் அவர் மற்ற விஷயங்களை, ராணுவ நடவடிக்கைகள் மற்றும் உளவுத்துறை, ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் வங்கதேசத்தின் பங்கு மற்றும் பட்ஜெட்டை மேற்பார்வையிட்டார்.
அவர் தனது பணியின் போது, பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் நெருக்கமாகப் பணியாற்றியவர். பிரதமர் அலுவலகத்தின் கீழ் ஆயுதப் படைப் பிரிவில் முதன்மைப் பணியாளர் அதிகாரியாகப் பணியாற்றினார். ராணுவத்தின் நவீனமயமாக்கலுடன் அவர் தொடர்புடையவர் என்று ராணுவ இணையதளம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“