தைவானைச் சேர்ந்த பிரபல பிகினி செல்ஃபி புகழ் மலையேற்ற வீராங்கணை கிஜி உவ், மலையேற்ற பயிற்சியின் போது கால் இடறி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
தைவான் நாட்டை சேர்ந்த மீட்புக் குழுவினர் கடந்த செவ்வாய் கிழமையன்று மலையேற்ற வீராங்கனையை பள்ளத்தாக்கில் இருந்து மீட்க முயற்சித்தும் அவரை சடலமாகவே மீட்க முடிந்தது.
மலையேற்ற வீராங்கனை கிஜி உவ் மரணம்
தைவான் நாட்டைச் சேர்ந்த 36 வயது நிறைந்த கிஜி உவ், பிகினி உடையுடன் மலை உச்சிக்கு ஏறி செல்பி எடுப்பதில் புகழ் பெற்றவர். சமூக வலைதளங்களில் இவரது பிகினி செல்பிக்கு ரசிகர்கள் ஏராளம். இவர் மலையேறும்போது மலையேற்ற உடைகளை அணிந்தே செல்வார். மலை உச்சியை அடைந்த பின்னரே பிகினி அணிந்து புகைப்படம் பகிர்வார்.
4 வருடங்களில் சுமார் 100 மலை உச்சிகளில் நின்று இவர் புகைப்படம் பதிவேற்றம் செய்துள்ளார். தைவானில் உள்ள யுஷன் தேசிய பூங்கா மலை உச்சியை ஏறும்போது கால் இடறி சுமார் 20-30 மீட்டர் ஆழத்திற்கு கீழே விழுந்தார். சேட்டிலைட் போன் மூலம் நண்பர்களிடம் விழுந்ததை பற்றியும், கால்களை அசைக்கக் கூட முடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். எனவே தம்மை வந்து மீட்டுச் செல்ல தகவல் தெரிவிக்குமாறு கூறியிருந்தார்.
இந்த விஷயத்தை மீட்பு அதிகாரிகளிடம் கிஜி நண்பர்கள் தெரிவிக்க, மோசமான வானிலையிலும் அவரை தேடி மீட்பு படையினர் ஹெலிகாப்டரில் விரைந்தனர். ஆனால் அங்கு சென்று பார்த்தப்போது கிஜி பரிதாபமாக உயிரிழந்தார். மலையேற்றத்தில் சாதனைப் படைக்க வேண்டுமென்று கனவு கொண்டிருந்த கிஜியை சடலமாகவே மீட்க முடிந்தது.
தைவானில் தற்போது வானிலை மோசமாகவே உள்ள காரணத்தினால், கிஜியின் உடலை திறந்த வெளியில் வைக்குமாறு தற்போதைக்கு அறிவுறுத்தியுள்ளனர் அதிகாரிகள். வானிலை சற்று சீரானது, ஹெலிகாப்டர் உதவி பெற்று உடலை கீழே கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.