பெகாசஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இஸ்தான்புல் சபிஹா கோக்கென் விமான நிலைய ஓடுபாதையில் இருந்து தரையிறங்கும்போது வழுக்கியதால் அருகில் இருந்த சாலையில் மோதியது. அங்கிருந்து வரும் காட்சிகள், விமானத்தின் உடற்பகுதி (fuselage) மூன்று பங்காக உடைந்திருப்பதை காட்டுகின்றது.
என்.டி.வி என்கிற தனியார் துருக்கி தொலைக்காட்சி நிறுவனம், விமானம் ஓடுபாதையில் சறுக்கிய பின்பு தீப்பிடித்ததாகவும், பின்பு அந்த தீ விரைவாக அணைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
துருக்கி அதிகாரிகள் உடனடியாக இந்த விமான நிலையம் மூடப்பட்டதாகவும், இஸ்தான்புல்லின் மற்ற பிரதான விமான நிலையத்திற்கு விமானங்கள் திருப்பி விடப்படுவதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மூன்று பேர் இறந்துள்ளதாக துருக்கி சுகாதார மந்திரி பஹ்ரெடின் கோகா தெரிவித்தார். மேலும், காயமடைந்த 179 பேர் பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
பெகாசஸுக்கு சொந்தமான இந்த விமானம் இஸ்மீர் நகரிலிருந்து வந்ததாக தனியார் என்டிவி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. விமான கண்காணிப்பு வலைத்தளமான ஃப்ளைட்ராடார் 24 , சேதமடைந்த விமானம் போயிங் 737 என்று தெரிவித்துள்ளது .
அதே விமான நிலைய ஓடுபாதையில்,கடந்த மாதம் ஜனவரி 7 ஆம் தேதியன்று பெகாசஸ் விமானம் ஒன்று சறுக்கியது. ஆனால், அந்த சம்பவத்தில் விமான பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் எற்படவில்லை.
விமானத்தின் பாகங்கள் பெரும்பாலும் அப்படியே இருக்கும்போது வினாத்தின் உடற்பகுதி (fuselage) இவ்வாறு திறந்திருப்பது அரிது.
கேபினில் பயணிகள் உயிர்வாழும் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக உடற்பகுதியின் அடிப்பகுதியில் உள்ள தாக்க சக்திகளை உறிஞ்சும் வகையில் விமானங்கள் வடிவமைக்கப் படுகின்றன.