பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமானதை அடுத்து, அவர் கண்காணிப்பிற்காக ICUவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக அங்கு அரசியல் கிளர்ச்சி எழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே, அவருக்கு இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் உடல்நிலை தேறிவருவார் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், போரிஸ் ஜான்சனின் ஆதரவாளர்கள் அவரது உடல்நிலை குறித்து தெரிவித்து வரும் கருத்துகளால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 6ம் தேதி இரவு முதல் அங்கு உச்சகட்ட கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிராக பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வரும் இந்த நேரத்தில், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவரது இடத்திற்கு தேவைப்பட்டால், வெளியுறவுத்துறை செயலாளர் டோமினிக் ராப்பை, நியமிக்க பிரதமர் அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
போரிஸ் ஜான்சன், ICUவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் அவருக்கு வெண்டிலேட்டர் வசதி செய்துதர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ICUவில் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் வசதி தான் தேவைப்படுமே தவிர, வெண்டிலேட்டர் வசதி செய்து தரப்படுவதில்லை என்றும், போரிஸ் ஜான்சனின் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் 1987ம் ஆண்டில் மார்கரேட் தாட்சர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி பெற்ற வெற்றிக்கு பிறகு தற்போது தான் அதாவது 4 மாதங்களுக்கு முன் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றதன் மூலம் 54 வயதான போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் என்ற கொடுத்த வாக்குறுதியை, போரிஸ் நிறைவேற்றி வரலாற்று சாதனையை நிகழ்த்தினார் என்றே கூறவேண்டும்.
பிரிட்டன் மூன்றரை ஆண்டுகாலமாக பிரெக்சிட் விவகாரத்தில் கடும் பாதிப்புகளை சந்தித்து வந்த நிகழ்வில், போரிஸ் ஜான்சன் தலைமையிலான புதிய அரசு, இந்த விவகாரத்தில் தீர்வு கண்டது.
இந்நிலையில், போரிஸ் ஜான்சனிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், ஐரோப்பிய யூனியனிலேயே நாம் சேர்ந்து இருந்திருக்கலாம் என்று மக்கள் எண்ணத்துவங்கி உள்ளனர்.
போரிஸ் ஜான்சனுக்கு மார்ச் 27ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அன்றிலிருந்து அவர் குடும்பத்தினருடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அன்றாட நிகழ்வுகளை அவர் வீடியோ கான்பரன்சிங் மூலமே மேற்கொண்டு வந்தார்.
போரிஸ் ஜான்சனின் இந்த தனிமை சார்ந்த நடவடிக்கைகளால், அங்கு அரசியல் கிளர்ச்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதன்காரணமாக, அங்கு தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக மக்கள் அதிகளவில் ஒரு இடத்தில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
போரிஸ் ஜான்சனுக்கு காய்ச்சல், இருமல் இருந்த நிலையில், மத்திய லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அவர் தீவிர கண்காணிப்பு ICUவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தற்காலிக பிரதமராக வெளியுறவுத்துறை செயலாளர் டோமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தினமும் கொரோனா குறித்த அப்டேட்களை வழங்கி வருகிறார். ஆனால், போரிஸ் ஜான்சன் குறித்த தகவல்களை அவர் வழங்குவதில்லை என்று ஜான்சனின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரோன், ஜான்சன் விரைவில் உடல்நலம் பெற வேண்டி வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார்.
போரிஸ் ஜான்சன் விரைவில் உடல்நலம் பெற அமெரிக்க மக்களுடன் இணைந்து தானும் இறைவனை பிரார்த்திப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போரிஸ் ஜான்சனின் 32 வது கர்ப்பிணி மனைவி கேரி சைமண்டசிற்கும் கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு, பிரிட்டனில் இதுவரை 51 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 5,373 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளுமாறு பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க