burqas banned in srilanka :இலங்கையில் ஆள் அடையாளம் தெரியாதவாறு, முகத்தை முழுமையாக மறைத்து முஸ்லீம் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி உலகையே உலுக்கும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து இலங்கை ராணுவமும், காவல் துறை படைகளும் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் வாகனங்களில் தொடர் சோதனை நடத்தப்பட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன. இலங்கை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த கோர சம்பவத்தையடுத்து தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளும் அவசரகால சட்டத்தின் கீழ் தடை செய்யப்படுவதாகவும், அந்த அமைப்புகளின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா அறிவித்தார்.
இந்நிலையில் இலங்கையில் மேற்கொண்டு தாக்குதல்களை தடுக்கும் விதமாக மற்றொரு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிக்காப் முக திரைகள், மாஸ்குகள், புர்காக்கள் போன்றவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மைத்ரிபால சிறிசேனாவின் இந்த உத்தரவை முஸ்லீம் சமூகத்தினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். மதநம்பிக்கை தொடர்பான விஷயத்தில் இலங்கை அதிரடியாக இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதை பல்வேறு முஸ்லீம் பிரிவினரும் எதிர்த்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.