டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட ஒருவருடன் பாலியல் உறவு வைத்து கொண்டாலும் டெங்கு காய்ச்சல் பரவும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்பெயினில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தி டெலிகிராப், இதுதொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனடியாக மருத்துவமனை சென்ற அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த அவருக்கு டெங்கு வைரஸால் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். ஆனால் அவர் வசித்து வந்த இடம் டெங்கு கொசுவால் பாதிப்பு இல்லாத இடம் என்பதால், அவருக்கு டெங்கு வைரஸ் தொற்று எப்படி பாதித்தது என்பது மருத்துவர்களுக்கு புரியவில்லை.
இந்நிலையில் மருத்துவர்கள் நடத்திய விரிவான ஆய்வில், டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய ஆண் துணையுடன் அவர் பாலியல் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இருவரது விந்து மாதிரிகளை எடுத்து சோதனை செய்யப்பட்டது. அப்போது டெங்கு வைரஸ் தாக்கியதற்கான அறிகுறிகள் அதில் இருந்தன. இதையடுத்து , பாலியல் உறவு மூலமாகவும் டெங்கு பரவும் என்பதை உறுதி செய்து மாட்ரிட் பொது சுகாதாரத் துறையின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண் - பெண் இடையேயான பாலியல் உறவில் டெங்கு காய்ச்சல் பரவியதாக தென்கொரிய நாட்டில் விவாதம் போய்க்கொண்டுள்ள நிலையில், ஸ்பெயினில் ஆண் - ஆண் பாலியல் உறவினால் டெங்கு பரவியது முதன்முறையாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள், AFP சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசு வகையின் மூலம், டெங்கு காய்ச்சல் மனிதர்களிடையே பரவுகிறது. தலைவலி, வாந்தி எடுத்தல், அதிக காய்ச்சல் உள்ளிட்டவைகள் டெங்குவின் அறிகுறிகள் ஆகும். தென்கிழக்கு ஆசியா, ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.