மெக்சிக்கோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் எஃகுப் பொருட்களுக்கு அதிக வரி விதித்திருந்தது அமெரிக்கா. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் அதிக வரி விதித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரெம்ப், பாதுகாப்பு காரணங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், மற்றும் எஃகுப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்று மார்ச் மாதம் அறிவித்தார்.
அமெரிக்கா புதிதாக கொண்டு வந்துள்ள ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கைகளால் நிறைய நாடுகள் பாதிப்பை சந்தித்து வருகிறது. கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகுப் பொருட்களுக்கு 25% மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு 10% வரியையும் விதித்திருந்தது. இதனை ஈடுகட்டும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியாக 12.63 பில்லியன் அமெரிக்க டாலர்களை அறிவித்தது.
கடந்த வெள்ளியன்று, இவ்வரி அமைப்பை அறிவித்தார் கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் க்றிஸ்டியா ஃப்ரீலேண்ட். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள், காஃபி, கெட்ச் அப், மற்றும் விஸ்கி போன்ற பொருட்களை குறிவைத்தே இந்த வரி அமைப்பினை செயல்படுத்தியது கனடா.
இதைப் பற்றி பேசிய அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர் சாரா சேண்டர்ஸ் “எஃகு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு கனடா வரி விதிப்பதால் அமெரிக்காவிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. இந்த வரியைக் கொண்டு கனடாவால் துளியும் ஆதாயம் அடைய முடியாது. ஆனால், இதனால் அமெரிக்கத் தொழிலாளர்கள் தான் அதிகம் பாதிப்படைவார்கள்” என்று கூறினார்.
“மேலும், கனடாவுடன் நாங்கள் மிக நீண்ட நாட்களாக நல்ல உறவு முறையினையே பேணி வருகின்றோம். ஆகவே இந்த பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடுவதற்கான முயற்சியை ட்ரெம்ப் தொடர்ந்து மேற்கொண்டு வருவார்” என்றும் குறிப்பிட்டார்.
இந்த வர்த்தகப் போரில் இந்தியாவும் கால்பதித்திருக்கின்றது. அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 28 பொருட்களுக்கு அரசாங்கம் வரி விதித்திருக்கின்றது. வர்த்தகப் போரில் கால் வைக்கும் இந்தியா கட்டுரையைப் படிக்க