இங்கிலாந்தில் கடந்த ஆண்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 20 வயது இந்திய மாணவர் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
ப்ரீத் விகால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தின் கார்டிப்பில் உள்ள தனது குடியிருப்புக்கு போதையில் இருந்த பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பி.பி.சி தெரிவித்துள்ளது. சவுத் வேல்ஸ் காவல்துறை, ப்ரீத் விகால் "போதையில்" இருந்த பாதிக்கப்பட்டவரை தனது கைகளில் தனது அறைக்கு எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளையும் பகிர்ந்துள்ளது.
கார்டிஃப் நகர மையத்திற்கு தனது நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணை ப்ரீத் விகால் சந்தித்தார். சவுத் வேல்ஸ் காவல்துறை ஒரு செய்திக்குறிப்பில், பாதிக்கப்பட்ட பெண் முதலில் தனது நண்பர்களுடன் சேர்ந்து இருந்தார், பின்னர் அவர் தனது நண்பர்களை விட்டு தனியாக வந்துள்ளார், பின்னர் கிங் எட்வர்ட் VII அவென்யூ மற்றும் நார்த் ரோடு வழியாக ப்ரீத் விகால் அவரைக் கொண்டு செல்வதை சிசிடிவியில் பார்த்தோம் என்று தெரிவித்துள்ளனர்.
சவுத் வேல்ஸ் காவல்துறையில் இருந்து துப்பறியும் கான்ஸ்டபிள் நிக் உட்லேண்ட், “இது போன்ற அந்நியர் தாக்குதல்கள் கார்டிப் பகுதியில் மிகவும் அசாதாரணமானது, ஆனால் ப்ரீத் விகால் ஆபத்தான நபராக இருந்துள்ளார். தனது நண்பர்களிடமிருந்து பிரிந்த ஒரு போதை மற்றும் பாதிக்கப்படக்கூடிய இளம் பெண்ணை ப்ரீத் விகால் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்,” என்று கூறினார் என பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
சிசிடிவியின் "விரிவான" காட்சிகள் ப்ரீத் விகால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்தது என காவல்துறை தெரிவித்துள்ளது.
(எச்சரிக்கை: காணொலியை பார்ப்பது பார்வையாளரின் விருப்பத்திற்குட்பட்டது)
இளம் குற்றவாளிகள் நிறுவனத்தில் ப்ரீத் விகாலுக்கு ஆறு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்ட பொறியியல் மாணவரான ப்ரீத் விகால், சிறையில் மூன்றில் இரண்டு பங்கு தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
வக்கீல் மேத்யூ கோப் டெய்லி மெயிலிடம் கூறுகையில், "பாதிக்கப்பட்டவர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, இரவு முடிவில் நம்பிக்கையற்ற போதையில் இருந்தார். அவர் எங்கே இருக்கிறார் அல்லது யாருடன் இருக்கிறார் என்று தெரியாத நிலையில், அவர் ப்ரீத் விகாலின் அருகில் நிர்வாணமாக விழித்ததை நினைவு கூர்ந்தார். அதன்பின் ப்ரீத் விகாலின் இன்ஸ்டாகிராம் முகவரியைக் கேட்டுப் பெற்று, பின்னர் போலீசில் புகார் செய்தாள்,” என்று கூறினார்.
ப்ரீத் விகாலின் வக்கீல் லூயிஸ் ஸ்வீட், டெய்லி மெயிலிடம், அவர் டெல்லியின் வடக்கில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் பொறியியல் படிப்பிற்கான உதவித்தொகையைப் பெற்றவர் என்றும் கூறினார். மேலும், “அவரது குடும்பத்தில் ஒரு பல்கலைக்கழகத்திற்குச் சென்ற முதல் நபர், அவரது கிராமத்தில் வெளிநாடு சென்று படித்த முதல் நபர். அவர் இங்கு வர வேண்டும் என்ற தனது கனவுகளையும் அவரது பெற்றோரின் கனவுகளையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.” என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil