பாரீஸ் சைக்கிளிங் போட்டியில் 1226 கிலோ மீட்டர் தூரத்தை 89 மணிநேரம் 1 நிமிடத்தில் கடந்து அசத்தியுள்ளார் சென்னயை சேர்ந்த 50 வயது இளைஞர் நிவெல்லி ஜே பிலிமோரியா.
பாரீஸ் - பிரெஸ்ட் - பாரீஸ் சைக்கிளிங் தொடர், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரில், 65 நாடுகளிலிருந்து 7,300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களில் 335 வீரர்கள் இந்தியாவில் இருந்து பங்கேற்றிருந்தனர். 42 வீரர்கள் சென்னையில் இருந்து பங்கேற்று இருந்ததில், 8 வீரர்கள் மட்டுமே கட் ஆப் (அதிகபட்சம் 90 மணிநேரம் ) தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த 8 வீரர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார் சென்னையை சேர்ந்த பிலிமோரியா. இவர் தனது வெற்றியின் ரகசியத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, மற்ற வீரர்கள் எல்லாம் 4 நாட்கள் போட்டியில், 5 மணிநேரம் அளவிற்கு உறங்குவார்கள். நானோ யானை போல, நின்றபடியும், சைக்கிள் ஹேண்டில்பாரில் தலையை சாய்த்தபடி உறங்கிவந்தேன். அதிகம் உறங்கிவிடுவேன் என்ற காரணத்தினால், நான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டேன். பாரீசில் வெப்பநிலை 3 டிகிரி முதல் 15 டிகிரி செல்சியஸ் வரைமட்டுமே இருக்கும். இந்த வெப்பநிலையை எதிர்கொள்ள மிகுந்த சிரமப்பட்டேன். இதற்கு தன்னை தயார்படுத்திக்கொள்வதற்காக, மலைப்பாங்கான இடங்களில் அதிகளவு பயிற்சி பெற்றதாக அவர் கூறினார்.