இந்திய வீரர்கள் தான் தங்கள் எல்லையில் ஊடுருவியுள்ளனர் : சீனா குற்றச்சாட்டு

தங்கள் எல்லையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாலை பணிகளையும் இந்திய வீரர்கள் தடுத்துவருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய-சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, சீன வீரர்கள் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து 2 ராணுவ நிலைகளை அழித்ததாக இந்திய அரசு திங்கள் கிழமை குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில், இந்திய வடகிழக்கு பகுதியில் உள்ள தங்கள் நாட்டு எல்லைக்குள் இந்திய வீரர்கள் தான் ஊடுருவியுள்ளதாக சீன வெளியுறவு துறை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷூவாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய-சீன இருநாட்டு உறவின் நேர்மையையும், எல்லை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள இருநாட்டு உடன்படிக்கைகளையும் இந்திய அரசு மதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதுமட்டுமல்லாமல், சீன பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் எல்லையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாலை பணிகளையும் இந்திய வீரர்கள் தடுத்துவருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த செயல் எல்லையின் அமைதியை குலைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாட்டு உறவை மேம்படுத்தவே சீன அரசு விரும்புவதாகவும், இதே வழியில் இந்தியாவும் இணையும் என நம்புவதாகவும் சீன பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீன அரசால் பிரிவினைவாதி என அழைக்கப்படும் தலாய் லாமா, கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவிற்கு வருகை தந்ததை சீன அரசாங்கம் கடுமையாக விமர்சித்தது. இந்த சம்பவம் இரு நாட்டு உறவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. எல்லை பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா,தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கிடையேயான கூட்டமைப்பு தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடி சீனா செல்லவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close