china news in tamil : உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பாதுகாப்பிற்கான புதிய சட்டத்தை அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் சீனா அமல்படுத்தியுள்ளது.
இந்த புதிய சட்டம் ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படுகின்றது. இது சீனாவின் மாநில அமைச்சரவைகளின் தலைவராக உள்ள, பிரதமர் லி கெக்கியாங்யை பலவீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இராணுவக் கொள்கையை வகுப்பதிலும், முடிவெடுக்கும் அதிகாரங்களை மத்திய இராணுவ ஆணையத்திற்கு (சி.எம்.சி) வழங்குவதிலும் அதிபர் ஜி ஜின்பிங் தான் முக்கிய முடிவுகளை எடுப்பார் என அந்நாட்டு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
மிக சக்திவாய்ந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC) தலைவராகவும், ராணுவத்திற்கு கட்டளையிடும் உச்ச பட்ச அதிகாரத்தையும் பெற்று உலக நாடுகளிலே முக்கிய தலைவராக ஜி ஜின்பிங் உருவெடுத்துள்ளார். மக்கள் விடுதலை இராணுவம் இயக்கம் (PLA) தொடங்கி, 2027-ம் ஆண்டோடு நூறு ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. எனவே 2027 க்குள் அமெரிக்காவுக்கு இணையாக முழுமையான நவீன கட்டமைப்பு கொண்ட இராணுவத்தை உருவாக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது . இதற்கான திட்டத்தை கடந்த ஆண்டு நவம்பரில் ஆளும் கட்சியான (CPC) சிபிசி நடத்திய மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது
இந்த புதிய சட்டத்தின் மூலம், அரசுக்கு சொந்தமான மற்றும் தனியார் நிறுவனங்கள் புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆயுதங்களை உருவாக்க வேண்டும். மற்றும் இணைய பாதுகாப்பு, விண்வெளி மற்றும் மின்காந்தவியல் ஆகிய துறைகளில் அந்த நிறுவனங்கள் தங்களின் முழுமையான பங்கை வழங்கிட வேண்டும்.
“சீனா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களை முறையாகவும் சட்டபூர்வமாகவும் முறியடிக்கவே நவீன ராணுவ கட்டமைப்பை உருவாக்குகிறது. அதன் அரசியல் நிலைபாடுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் ‘சிறப்பு’ தன்மையை நிலைப்படுத்தும் வகையில் சட்டம் வரையறை செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் அரசியல் அமைப்பு இயற்கையாவே மற்ற நாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எனவே பெய்ஜிங் சி.எம்.சி – யின் தலைமைக்கு இந்த அதிகாரத்தை வழங்கிறது. எனவே சி.எம்.சி – யின் தலைமை பி.எல்.ஏ மூலமாக சீனாவின் நலனை பாதுக்காக்க சில முடிவுகளை எடுப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை” என கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியீடான ஸ்டடி டைம்ஸின் முன்னாள் துணை ஆசிரியர் டெங் யுவன் கூறியுள்ளார்.
“தற்போது ஆளும் சி.எம்.சி கட்சி நீண்ட கால ஆட்சி புரிய சட்டப்பூர்வமாகவும், கொள்கை அடிப்படையிலும் நம்பிக்கை அளிக்கும் வண்ணம் உள்ளது. அதோடு சீன ராணுவத்திற்கு இராணுவ தலைமையை விட கட்சி தலைமை கட்டளையிட்டால் போதுமானது என்னும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் போர் ஒத்திகை பார்ப்பதற்கு வழி வகை செய்கின்றது. அதோடு நாட்டின் நலனை பேண சட்டப்பூர்வமாகவும் முறையாகவும் போர் புரிய அனுமதி அளிக்கின்றது ” என ஷாங்காய் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் மற்றும் சட்டத்தின் முன்னாள் பேராசிரியர் சென் டாயின் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த புதிய சட்ட திருத்தத்தில் பெரிய மாற்றமாக பார்க்கப்படுவது எதுவென்றால் மாநில அமைச்சரவைகளின் தலைவரை பலவீனப்படுத்ததும் வகையில் சட்டம் திருத்தப்பட்டது தான். அதோடு சீன ராணுவத்தை வழி நடத்தவும், கொள்கை முடிவு எடுக்கவும் இனி அவருக்கு எந்தவொரு அதிகாரமும் இருக்காது” என சூச்சோ பல்கலைக்கழகத்தின் இராணுவ சட்ட நிபுணர் ஜெங் ஷிப்பிங் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“