2011ம் ஆண்டு சீனா “டியான்காங் - 1” என்ற விண்வெளி நிலையத்தை விண்ணில் ஏவியது. கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதி இந்த விண்வெளி செயலிந்தது எனச் சீனா அறிவித்தது. மேலும் செயலிழந்த இந்த விண்வெளி கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் சுற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், பூமியை நோக்கி இந்த விண்வெளி நிலையம் பயணித்து வந்தது.
செயலிழந்த விண்வெளி, மார்ச் 30ம் தேதியில் இருந்து ஏப்ரல் 2 தேதிக்குள் பூமியில் விழும் என்று ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் இந்தச் செய்தியால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் பூமியின் வளிமண்டல பகுதிக்குள் இன்று நுழைந்த விண்வெளி நிலையம், அதிவேகமாகப் பூமியை நோக்கிப் பாய்ந்து வந்தபோது காற்றின் உராய்வினால் அதன் பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிட்டது.
எரிந்த பாகங்கள் தவிர எஞ்சி இருந்த விண்வெளி மற்றும் உடைந்த பாகங்கள், இந்திய நேரப்படி இரவு 10.15 மணியளிவில் தெற்கு பசிபிக் கடலில் விழுந்ததாகச் சீனா விண்வெளி பொறியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும் இடைந்த பாகத்தில் ஒன்று முழு பேருந்தின் அளவுக்கு உள்ளதாகவும், அது பெரும்பாலும் விண்வெளி நிலையத்தின் எஞ்ஜின் போன்ற பாகமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெரும்பாலான பாகங்கள் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அதோடு, உடைந்த பாகங்கள் பூமியின் நிலங்கள் பகுதியில் விழாமல் கடலில் விழுந்ததால் பூமிக்கும் மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் விழுந்த இந்தப் பாகங்களை தேடி மீட்கும் பணியில் சீனா தற்போது ஈடுபட்டு வருகிறது.