சீனாவை சேர்ந்த இரண்டு போர் விமானங்களும், இரண்டு குண்டுவீச்சு விமானங்களும் நேற்று தங்களின் நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் குற்றம்சாட்டியுள்ளது.
தைவானில் தொடர்ந்து சீன ராணுவ விமானங்கள் நுழைந்து அத்துமீறி வருகின்றன. ஏற்கனவே இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ஒரே நாளில் தைவானின் எல்லைக்குள் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி 39 சீன விமானங்கள் ஊடுருவி உள்ளன.
இந்த ஊடுருவல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ விமானப்படையின் குண்டுவீச்சு விமானம் நேற்று மீண்டும் தங்கள் நாட்டின் வான்வெளியில் நுழைந்ததாக தைவான் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில், சீன-தைவான் பிரச்சனை எழுந்துள்ளது.
சீனாவில் ஓராண்டுக்கு பிறகு கொரோனா பலி
சினாவில் ஓராண்டுக்கு பிறகு நேற்று முதல்முறையாக கொரோனாவால் 2 பேர் பலியாகினர்.
உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனா கொரோனா முதல் அலையின்போதே கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்த சூழ்நிலையில் ஒமைக்ரான் பரவல் எதிரொலியால் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு ஜனவரிக்கு பிறகு கொரோனாவுக்கு சீனாவில் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால், நேற்று இருவர் உயிரிழந்தது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொராக்கோவுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தூதர் நியமனம்!
மொராக்கோவுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த தூதரக அதிகாரியான புனித் தல்வார் என்பவரை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார்.
வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்டுக்கான அமெரிக்கத் தூதராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த புனித் தல்வாரைப் அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார்.
தலைநகர் வாஷிங்டனில் வசித்துவரும் இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த புனித் தல்வார், கார்னெல் பல்கலைகழகத்தில் பொறியியல் பயின்ற தல்வார், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரம் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தார்.
தற்போது அமெரிக்க வெளியுறவுத் துறையின் மூத்த ஆலோசகராகப் பணிபுரிந்துவரும் புனித் தல்வார், வெள்ளை மாளிகை, அமெரிக்க நாடாளுமன்றம் ஆகியவற்றின் தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை தொடர்பான பிரிவுகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.
இன்ஸ்டாகிராமில் டிஜிட்டல் உரிமம்.. ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் நடிகை பலி.. மேலும் செய்திகள்
பிரபல ஹாலிவுட் நடிகை மீது இனவெறி தாக்குதல்
அமெரிக்காவில் ஜப்பான் வம்சாவளியை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை கரென் புகுஹரா மீது இனவெறி தாக்குதல் நடத்தபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் அண்மைக்காலமாக ஆசிய அமெரிக்கர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, கடந்த 2020-ம் ஆண்டுக்கு பிறகு அடிக்கடி இதுபோன்ற இனவெறி தாக்குதல்கள் நடக்கின்றன.
இந்நிலையில், அமெரிக்காவில் ஜப்பான் வம்சாவளியை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை கரென் புகுஹரா மீது இனவெறி தாக்குதல் நடத்தபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘தி பாய்ஸ்’ மற்றும் ‘சூசைடு ஸ்க்வாடு’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் கரென் புகுஹரா.
30 வயதான இவர் தன் மீது நடத்தப்பட்ட இனவெறி தாக்குதல் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil