Advertisment

"இந்தியர்கள் சுயமரியாதைக்காரர்கள்" மக்களிடம் சொன்ன இம்ரான் கான் - என்ன காரணம்?

இறக்குமதி செய்யப்பட்ட அரசாங்கத்தை ஏற்கமுடியாது, மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
"இந்தியர்கள் சுயமரியாதைக்காரர்கள்" மக்களிடம் சொன்ன இம்ரான் கான் - என்ன காரணம்?

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், புதிய அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை ஆட்சிக்கு வரும் போது, தனது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

பாகிஸ்தான் நாட்டு மக்களிடம் உரையாற்றிய இம்ரான் கான் தனது பேச்சில் இந்தியா குறித்தும் குறிப்பிட்டார். எந்தவொரு உலக சக்தியாலும் கட்டளையிட முடியாத ஒரு சுயமரியாதை தேசம் என்பதற்கு இந்தியா எடுத்துக்காட்டு என்றார்.

மேலும், தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்ததை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.

அவர் பேசுகையில், "இறக்குமதி செய்யப்பட்ட அரசாங்கத்தை நான் ஏற்கமாட்டேன், நான் வீதிக்கு வருவேன்….மக்களால் மட்டுமே என்னை ஆட்சிக்கு கொண்டு வர முடியும், மக்கள் உதவியுடன் நான் மீண்டும் வருவேன். ஞாயிற்றுக்கிழமை மாலை தனது ஆதரவாளர்கள் வெளியே வந்து போராட வேண்டும்.

பாகிஸ்தான், ரஷ்யாவுக்கு எதிராக பேச வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் நமக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். ஆனால் இந்தியா இறையாண்மை கொண்ட நாடு என்பதால் அவர்களால் இதே அழுத்தத்தை இந்தியாவுக்கு கொடுக்க துணியவில்லை

புதிய அரசை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக சட்டசபையை கலைத்தேன். நான் போராட்டத்திற்குத் தயாராக இருக்கிறேன்… அமைதியான போராட்டத்தில் என்னுடன் சேருங்கள்" என்றார்.

342 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், பிரதமர் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளுக்கு 172 உறுப்பினர்கள் தேவை. ஆனால், தற்போது தேவையான எண்ணிக்கையை விட அதிகமாகவே அவர்களிடம் உள்ளனர். பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டு வெளியேறிய முதல் பிரதமர் என்ற பெயர் கானுக்கு வரலாம்.

கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்ட துணை சபாநாயகரின் தீர்ப்பை,உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியல் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அமர்வு, சபாநாயகரின் உத்தரவை ஒருமனதாக ரத்து செய்து, மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. பாராளுமன்றத்தை கலைத்து முன்கூட்டியே தேர்தலை நடத்தும் பிரதமரின் நடவடிக்கை "அரசியலமைப்புக்கு எதிரானது" என கருத்து தெரிவித்தது.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை ஏற்பாடு செய்வதற்காக ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு (உள்ளூர் நேரம்) தேசிய சட்டமன்றத்தின் அமர்வை அழைக்குமாறு கீழ்சபையின் சபாநாயகருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றால் புதிய பிரதமரை தேர்வு செய்ய அறிவுறுத்தியது.

இதுகுறித்து பேசிய கான், "உச்சநீதிமன்றம், நீதித்துறையை நான் மதிக்கிறேன், ஆனால் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிடும் முன் மிரட்டல் கடிதத்தைப் பார்த்திருக்க வேண்டும். தீர்ப்பால் வருத்தப்படுகிறேன், ஆனால் அதை ஏற்றுக்கொள்கிறேன். இது மிகப் பெரிய பிரச்சினை. ஆனால், நீதிமன்றத்தில் எவ்வித விவாதமும் மேற்கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றம் குறைந்தபட்சம் ஆவணத்தைக் கேட்டுப் பார்த்திருக்கலாம்" என்றார்.

அமெரிக்க ராஜதந்திரி ஒருவர் பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்தை அச்சுறுத்துவதாக கான் தனது குற்றச்சாட்டுகளை மீண்டும் கூறினார்.

இதுதொடர்பாக பேசிய அவர், பாகிஸ்தானின் 220 மில்லியன் மக்களுக்கு இது மிகவும் வெட்கக்கேடானது, ஒரு வெளிநாட்டு அதிகாரி மூன்றாவது நபர் மூலம் நாட்டின் பிரதமருக்கு உத்தரவிடுகிறார். கடுமையான விளைவுகள் ஏற்படும். நான் பதவியை விட்டு வெளியேறினால் மன்னிக்க வேண்டும். நாம் இப்படி வாழ வேண்டும் என்றால், ஏன் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றோம். அரசாங்கத்தை அகற்றும் வெளிநாட்டுச் சதியை நிராகரித்து மக்கள் வெளியே வர வேண்டும். நீங்கள் எழுந்து நிற்கவில்லை என்றால், உங்களைக் காப்பாற்ற யாரும் வர மாட்டார்கள் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pakistan Imran Khan Pakistan Pm Imran Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment