துபாய் இளவரசருடன் ராயல் லன்ச்! 5 லட்சம் செலுத்தி ஏமாந்த சென்னை இளம்பெண்!

துபாய்க்கே நேரடியாக சென்ற கவிதா, அரச குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்று போலீசிடம் தெரிவித்து இருக்கிறார்

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் துபாய் இளவரசருடன் மதிய உணவு சாப்பிடுவதற்காக 5 லட்சம் செலுத்தி ஏமாந்திருக்கும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் உளவியலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், துபாய் இளவரசர் ஷேக் ஹம்தன் பின் மொஹம்மத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை ஃபாலோ செய்து வருகிறார்.

திடீரென்று ஒருநாள், இளவரசரின் ட்விட்டர் கணக்கில் இருந்து இவருக்கு மெசேஜ் வந்துள்ளது. அதில், துபாய்க்கு வந்து அரச குடும்பத்துடன் மதிய உணவில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இளவரசரிடம் இருந்து நேரடியாக இப்படியொரு அழைப்பு வந்திருப்பதால் திக்குமுக்காடிப் போனார் அந்தப் பெண்.

ஆனால், அரண்மனைக்குள் நுழைய வேண்டுமெனில், ராயல் கார்டு வேண்டும் என்றும், அதற்கு ஐந்து லட்ச ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்றும் இளவரசர் கணக்கில் இருந்து செய்தி வந்தது. வெஸ்டர்ன் யூனியன் மூலம் 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் இளவரசர் சொல்ல, ‘எனது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக செலுத்துகிறேன்’ என்று கூறி, 5 லட்சம் ரூபாயை அனுப்பி இருக்கிறார் அப்பெண்.

அதன்பின், அந்த ட்விட்டர் கணக்கில் இருந்து கவிதாவுக்கு எந்த மெசேஜும் வரவில்லை. எவ்வளவோ முறை கவிதா மெசேஜ் அனுப்பியும், இளவரசரிடம் இருந்து ரிப்ளை வரவில்லை.

உடனே, துபாய்க்கே நேரடியாக சென்ற கவிதா, அரச குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்று போலீசிடம் தெரிவித்து இருக்கிறார். ஆனால், போலீசார் அதற்கு அனுமதிக்கவில்லை. அதுமட்டுமின்றி, ‘போலி ட்விட்டர் கணக்கு மூலம் நீங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளீர்கள்’ என்று அவரிடம் தெரிவிக்க, அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டார் கவிதா.

அதன்பிறகு, துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் கவிதா புகார் செய்ய, அதன் பிறகு, இதே போன்று பலரும் ஏமாந்து இருப்பது அவருக்கு தெரிய வந்திருக்கிறது. பிறகு தூதரகத்தின் ஆலோசனைப்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கவிதா புகார் அளித்திருக்கிறார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், இளவரசரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அவர்களால் தான் பலரும் பணம் இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

×Close
×Close