வடகொரியாவிற்கு அமெரிக்காவிற்கும் இடையேயான தொடர் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியாக அமையுமா ட்ரம்ப் மற்றும் கிம் ஜோங் உன் சந்திப்பு. பல மாதங்களாக தொடர்ந்து தடைப்பட்டுக் கொண்டே சென்றிருந்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது சிங்ப்பூர் அரசாங்கம். அமெரிக்கா மற்றும் வடகொரிய நாட்டினை சேர்ந்த தலைவர்கள் சந்திப்பது இதுவே முதல் முறை என்பதால் இச்சந்திப்பு வரலாற்றில் மிக முக்கிய ஒன்றாக இருக்கின்றது.
"உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்" என்று கிம் தன்னுடைய முதல் வார்த்தைகளை ட்ரம்பிடம் பேச இந்த சந்திப்பு தொடங்கியிருக்கின்றது. "இது எனக்கு மிகவும் பெருமை மிக்க ஒன்று. இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த தீவிர உறவின் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்று பதில் கூறியிருக்கின்றார் ட்ரம்ப். உலகமே உற்று நோக்கி கவனித்துக் கொண்டிருக்கும் இந்த சந்திப்பிற்கு பின்னால் என்ன நடக்கும்? கொரிய யுத்தம் முடிவிற்கு வருமா? அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கையினை வடகொரியா மேற்கொள்ளுமா? இல்லை இரு நாட்டுத்தலைவர்களும் ஒருவரைப் பற்றி ஒருவர் பரஸ்பரம் தெரிந்து கொண்டோம் என்று கைக்குலுக்கிக் கொண்டு அவரவர் கொள்கைகளில் பின் வாங்காமல் இருப்பார்களா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த சந்திப்பு நிகழ்வானது சிங்ப்பூரில் இருக்கும் செண்டோசா தீவில், கேபெல்லா ஹோட்டலில் நடைபெற்றது. ட்ரம்ப் அவர்களுக்கு இது ஒரு திகிலூட்டும் சந்திப்பாக இருந்தாலும், கிம்மிற்கு இந்த சந்திப்பினை ஏற்படுத்தியது என்பது ஒரு சவாலான காரியம் தான்.