Contemporary slavery extensive globally including India, Kabul bomb blast, Corona virus today world news: இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.
அதிகரித்து வரும் அடிமைத்தனம்... ஐ.நா கவலை
சீனாவின் உய்குர் சிறுபான்மையினருக்கு கட்டாய உழைப்பு, தெற்காசியாவில் தாழ்த்தப்பட்ட தலித்துகளுக்கு கொத்தடிமைத் தொழிலாளர்கள் மற்றும் வளைகுடா நாடுகள், பிரேசில் மற்றும் கொலம்பியாவில் வீட்டு அடிமைத்தனம் உள்ளிட்ட சமகால அடிமை முறைகள் உலகம் முழுவதும் பரவலாக நடைமுறையில் உள்ளன என்று ஐ.நா புலனாய்வாளர் கூறுகிறார்.
மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர் டோமோயா ஒபோகாட், ஆப்பிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தில் உள்ள மொரிட்டானியா, மாலி மற்றும் நைஜர் ஆகிய நாடுகளில் பாரம்பரிய அடிமைத்தனம், குறிப்பாக சிறுபான்மையினரின் அடிமைத்தனம் காணப்படுகிறது என்று கூறினார். ஐ.நா பொதுச் சபைக்கு புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், அடிமைத்தனத்தின் மற்றொரு சமகால வடிவமான குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் அதன் மோசமான வடிவங்கள் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ளது என்று கூறினார்.
"ஆசியா மற்றும் பசிபிக், மத்திய கிழக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், 4 முதல் 6 சதவீத குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் ஆப்பிரிக்காவில் (21.6%) சதவீதம் அதிகமாக உள்ளது. துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் (23.9%)" என்று அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு – 30 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பிரசித்தி பெற்ற மசூதியில் நேற்று ஏராளமானோர் வழக்கமான தொழுகையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியாயினர். பலர் காயமடைந்தனர். தகவலறிந்த மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
கொரோனா குறையவில்லை – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
கொரோனா பரவலின் தாக்கம் குறையவில்லை என்றும், கடந்த 4 வாரங்களில் இறப்பு விகிதம் 35 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், நாம் கொரோனாவுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பொதுவாக நாம் இதுவரை கடைபிடித்த முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், கூட்டங்களை தவிர்த்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.