உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பிற்கு காரணமான வைரஸ், சீனாவின் வூஹான் பகுதியில் உள்ள வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் வந்ததா என்பது குறித்து ஆய்வு நடத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா வைரஸ் பாதிப்பு சர்வதேச அளவில், பல்லாயிரக்கணக்கானோரை காவு வாங்கியிருக்கும் நிலையில், அதன் உருவாக்கம் குறித்து பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன. சிலர் சீனாவின் வூஹான் பகுதியில் உள்ள வைராலஜி ஆய்வகத்தில் இருந்துதான் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். சீனாவில் உள்ள விலங்குகள் சந்தையில் ஏற்பட்ட தொற்று பாதிப்பு காரணமாக இந்த வைரஸ் தோன்றியதாக சிலரும், இயற்கையாகவே இந்த வைரஸ் தோன்றியுள்ளதாக சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் குறித்த அடிப்படை ஆதாரம் குறித்து மாறுபட்ட கருத்துகளே உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உண்மை நிலையை அறிய, சீனாவிடம் விளக்கம் கேட்கப்படும் என்று அமெரிக்க உள்துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க கூட்டுப்படைகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லே கூறியதாவது, தங்களது உள்துறை அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளின் படி, கொரோனா வைரஸ் இயற்கையாகவே உருவாகியிருக்க கூடும் என்றும் இது சீனாவில் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்ற கருத்துக்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
Fox News வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சீனா, இந்த வைரசை உயிர் ஆயுதமாக உருவாக்கவில்லை. ஆனால், அமெரிக்கா இதுபோன்ற வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், இந்த துறையில் தாங்களும் ஜாம்பவான்கள் என்பதை நிரூபிக்கவே, இந்த வைரசை, சீனா உருவாக்கியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Fox News வெளியிட்டுள்ள செய்தியில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாகவே அங்கு செயல்பாடுகள் நடைபெற்றுவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வூஹான் ஆய்வகத்தில் இந்த வைரஸ் குறித்த சோதனை நடைபெற்றதாகவும், அங்கு இருந்த நபர் பாதுகாப்பு விதிகளை மீறி அருகில் இருந்த விலங்குகள் சந்தைக்கு சென்றதன் விளைவாகவே, இந்த வைரஸ் அதிகளவில் மற்றவர்களுக்கு பரவியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப் கூறியதாவது, வூஹான் ஆய்வகத்திலிருந்து தப்பி வந்த நபரால் இந்த வைரஸ் அதிகளவில் மற்றவர்களுக்கு பரவியுள்ளது. நாங்கள் இதுகுறித்து முன்னரே எச்சரித்திருந்தோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை திறம்பட மேற்கொண்டு வருவதாக டிரம்ப் கூறினார்.
சீன அதிபர் ஜின்பிங் உடனான சந்திப்பின்போது, கொரோனா வைரஸ் உருவாக்கத்தில் வூஹான் ஆய்வகத்தின் பங்கு குறித்து விவாதிப்பது தற்போதைய சூழலுக்கு உகந்ததல்ல என்பதை நான் அறிவேன். அமெரிக்காவில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இரவு பகல் பாராது அயராது ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி குறித்து அந்நாட்டு தலைவருடன் பேசுவேன் என்று டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் ஆய்வகத்தில், கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகவும், வைரஸ் பாதித்த நபர், அருகிலுள்ள விலங்கு சந்தைக்கு சென்றதாலேயே, இந்த வைரஸ் தொற்று அதிகமானோர்க்கு பரவியதாக வெளியான தகவலை, சீனா, பிப்ரவரி மாதம் முதலே மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Fox News செய்தி சேனலுக்கு பேட்டியளித்துள்ள அமெரிக்க உள்துறை செயலாளர் மைக் பாம்பியோ கூறியதாவது, கொரோனா வைரஸ், வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் தோன்றியுள்ளது என்பதை அனைவரும் அறிவர். இந்த வைரஸ் தொற்று எவ்வாறு பல்லாயிரக்கணக்கானோருக்கு பரவியது எப்படி என்பதை சீனா விளக்க வேண்டும். வெளவால்களிடமிருந்தே இந்த வைரஸ் உருவாகியிருப்பதாக சீனா ஏன் சொல்கிறது என்பதையும் தெளிவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் 3 ஆயிரம் பேரே மரணமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில், சீனாவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பாம்பியோ கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க