இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 53 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் இந்தியாவுக்கு உதவும் பொருட்டு, உலக வங்கி 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை அவசர கால நிதியாக வழங்க முன்வந்துள்ளது.
சீனாவை புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு, அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா பாதித்த உலக நாடுகளுக்கு உதவும் வகையில், உலக வங்கி முதற்கட்டமாக 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதியுதவியை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஒதுக்கியுள்ளது.
உலக வங்கி முதற்கட்டமாக ஒதுக்கியுள்ள 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியில், பெரும்பகுதி அதாவது 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த நிதியுதவியில், சிறந்த பரிசோதனை, தொடர்பு தடமறிதல், ஆய்வக மருத்துவ பரிசோதனைகள், பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்தல், புதிய ஐசோலேசன் வார்டுகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தெற்காசிய நாடுகளை பொறுத்தவரை, பாகிஸ்தானிற்கு 200 மில்லியன் அமெரிக்க டாலர்களும், ஆப்கானிஸ்தானிற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களும், இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டாலர்களும், மாலத்தீவுக்கு 7.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான நிதியுதவியை உலக வங்கி ஒதுக்கியுள்ளது.
கொரோனா பாதிப்பால், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை அடுத்த 15 மாதங்களில் மேற்கொள்ள உலக வங்கி 160 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் மூலம், பொருளாதார சரிவிலிருந்து மீட்பு, வளர்ச்சிக்கான காரணங்களை ஆராய்தல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை மீட்டெடுத்தல், ஏழை எளிய மக்களின் வாழ்வதாரத்திற்கு உறுதியளித்தல் போன்றவை மேற்கொள்ளப்படும்.
கொரோனா பாதிப்புகளில் சிக்கியுள்ள 65க்கும் மேற்பட்ட நாடுகளின் மருத்துவ பணிகளை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் உலக வங்கி துரிதமாக ஈடுபட்டுள்ளதாக உலக வங்கி குழும தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, வளர்ச்சியடைந்த நாடுகளில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மட்டுமல்லாது அந்நாடுகளில் பொருளாதார மீட்புக்கும் உதவி செய்கிறோம். வறுமை நாடுகளில் , அவர்களின் நிலை மேலும் மோசம் ஆகிவிடாதபடி பார்த்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.