ஹைட்ராக்சிகுளோராகுயின் உள்ளிட்ட மருந்துப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விலக்கிக்கொண்டது. பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கைக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு, அமெரிக்காவுக்கு, இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்திருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, இரண்டு நண்பர்களுக்கிடையே உள்ள நட்புறவின் மகத்துவம் தெரியவேண்டுமெனில், சில இக்கட்டான தருணங்கள் தேவைப்படுகின்றன. ஹைட்ராக்சிகுளோரோகுயின் விவகாரத்தில், இந்திய அரசு எடுத்த முடிவிற்காக, அதற்கும், இந்திய மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்றியை நான் எப்போதும் மறக்கமாட்டேன். பிரதமர் மோடிக்கு நன்றி. உங்களது வலிமையான அரசு இந்த இந்த உதவியை செய்ததிலிருந்து கொரோனா போருக்கு எதிரான தங்களின் மனிதாபிமானம் உலகுக்கு தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு அமெரிக்கா மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளதால், இந்தியாவிடம் இருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை ஏற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 29 மில்லியன் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. இதன்மூலம், பிரதமர் மோடி மனிதாபிமானனமிக்க சிறந்த மனிதர் என்பது புலனாகியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களுக்கும் இந்த மருந்து தேவைப்படுவதால், ஏற்றுமதி செய்தது போதும் என்று பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, பத்திரிகையாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், இந்தியா, மருந்துகளை ஏற்றுமதி செய்ய தவறும்பட்சத்தில், பதிலடியை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தார். டிரம்பின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து சில மணிநேரங்களுக்காக, கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு, மனிதாபிமான அடிப்படையில் மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய மக்களுக்கு தேவையானதைப் பொறுத்து மற்றவைகளை ஏற்றுமதி செய்யவும், மருந்து நிறுவனங்களுடன் இதுகுறித்து கலந்தாலோசித்துள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 4ம் தேதி, பிரதமர் மோடியை, தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் தயாரிப்பில் இந்தியா சர்வதேச அளவில் முன்னணி இடம் வகிக்கிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து முக்கியபங்காற்றுவதாக அமெரிக்காவின் நியூயார்க்கில் 1,500 பேரிடம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு அமெரிக்காவில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். 398,785 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 138,836 பேர் நியூயார்க் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைட்ராக்சிகுளோரோகுயின், மலேரியாவை குணப்படுத்தும் மருந்து தானே என்று அனைவரும் கேட்கிறீர்கள். இதன்மூலம், கொரோனா பாதிப்பை சரிசெய்ய முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், கொரோனாவால் ஏற்படும் மரணத்தில் இருந்து காக்க இந்த மருந்து உதவுவதாக, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளில் 70 சதவீத ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தின் தேவையை இந்தியா பூர்த்தி செய்வதாக இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுதர்சன் ஜெயின் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.