சீனாவில், கடந்த ஆண்டு பிற்பகுதியில் விலங்குகளிடம் தோன்றிய நாவல் கொரோனா வைரஸ், ஆய்வகத்தில் கையாளப்படவில்லை (அ) தயாரிக்கப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம்," மத்திய சீன நகரமான வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்து வைரஸ் வெளியானதா? என்பதைத் தீர்மானிக்க தனது அரசாங்கம் முயற்சிப்பதாகக் கூறினார்.
" கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களும், விலங்கிடமிருந்து வைரஸ் தோன்றியிருப்பதாகக் கூறுகின்றன. ஆய்வகம் உட்பட வேறு சில இடங்களில் இந்த வைரஸ் உருவாக்கப்பட இல்லை " என்று உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஃபடெலா சாய்ப் தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், வைரஸ் (அ) நோய் ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்கு பரவாமல் தடுக்கும் இயற்கை வழிமுறைகளைத் தாண்டி (species barrier) மனித இனத்திற்குள் இந்த கொரோனா வைரஸ் எப்படி குதித்தது? என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ஒரு விலங்கு இடைப்பட்ட ஓம்புயிரியாக (HOST) இருந்திருக்கிறது. பெரும்பாலும், வெளவால்கள் வைரஸுக்கான சாதகமான சூழலை உருவாக்கி கொடுத்தாலும், வெளவால்களிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் எவ்வாறு வந்தது? என்பதற்கான ஆய்வுகள் இன்னும் தேவைப்படுகிறது," என்று தெரிவித்தார்.
கவனக்குறைவாக ஏதேனும் ஒரு ஆய்வகத்திலிருந்து வைரஸ் தப்பித்திருக்கலாமா? என்று கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. வைரஸைத் தொகுத்தது (அ) தப்பிக்க அனுமதித்தது என்ற வதந்திகளை வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வு நிறுவனம் நிராகரித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வந்த நிதியுதவியை நிறுத்தி வைப்பது தொடர்பாக அதிபர் டிரம்ப் அறிவிப்பின் தாக்கம் குறித்து கேள்விக்கு ,“ அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பு குறித்த நிலைமையை நாங்கள் இன்னும் மதிப்பீடு செய்கிறோம்… பற்றாக்குறை ஏற்பட்டால் எங்கள் தோழமைகளிடம் பேசுவோம் ” என்று தெரிவித்தார்.
கொரோனா தொற்று மட்டுமல்லாமல், போலியோ, எச்.ஐ.வி, மலேரியா போன்ற பல்வேறு சுகாதார திட்டங்களை நாங்கள் தொடர்வது மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்ததார்.