அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள பிரான்க்ஸ் உயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா தொற்று இருப்பதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பிற்கு ஆயிரம் பேர் பலியாகியுள்ள நிலையில், அந்நகரத்தில் உள்ள 3 பெரிய உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்டவைகள் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் மூடப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
பிரான்க்ஸ் உயிரியல் பூங்காவில் உள்ள நாடியா என்ற 4வயது மலேசிய புலி, அதன் தங்கை புலி, 2 அமூர் புலிகள், 3 ஆப்ரிக்க சிங்கங்கள் உள்ளிட்டவைகளுக்கு கடந்த சில நாட்களாக வறட்டு இருமல் இருந்து வந்தது. அவைகள் விரைவில் குணமடைந்துவிடும் என்று எதிர்பார்த்ததாக உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் பீதி, உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில், நாங்களும் அதுதொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வந்தோம். பூங்காவில் உள்ள பூனைகளுக்கு எடைக்குறைவு, அதிகளவிலான பசி உள்ளிட்டவைகள் ஏற்பட துவங்கியதும் அதற்கான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை துவங்கினோம். அவைகள் இந்த அறிகுறிகளிலிருந்து விடுபடும் வரை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
விலங்குகளினால் கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில், சீனாவின் வுஹான் மார்க்கெட் நிலவரத்தை கருத்தில் கொண்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அமெரிக்காவிலும் வளர்ப்பு பிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகளினால், கொரோனா தொற்று பரவவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹான் மார்க்கெட் பகுதியில் உள்ள விலங்குகள் சந்தையில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியதாகவும், இதன் பாதிப்பிற்கு 1 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவில் ஒரு கருத்து நிலவிவருகிறது.
அமெரிக்காவில், பூனை, நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்படாத நிலையில், முதன்முதலாக நாடியா என்ற புலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று கொண்ட மனிதரிடமிருந்து தான் விலங்குகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வேளாண்மை துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தில் கடந்த மார்ச் மாதத்தில் பூனைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. ஹாங்காங்கிலும், நாய்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தது. வைரஸ் தொற்று இருந்த நபர்களிடமிருந்தே, இந்த விலங்குகளுக்கு தொற்று பரவியதாக கண்டறியப்பட்டது.
பிரான்க்ஸ் உயிரியல் பூங்காவில் காப்பாளரிடம் இருந்தே நாடியா புலிக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுவதால், விலங்குகள் மற்றும் காப்பாளர்களிடையே அதிக இடைவெளி மற்றும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.