ஸ்பெயின், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பிற்கு குரல் கொடுக்கும் நாடாக இருந்து வருகிறது. ஸ்பெயின் நாட்டின் பல செயல்பாடுகள் உலக நாடுகளிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அந்தவகையில் தற்போது சுரியா மாகாணத்தில் நடந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது. கடந்த ஜனவரி 28-ம் தேதி அந்நாட்டைச் சேர்ந்த தம்பதி டிக்டாக் லைவ்- வில் 3 நண்பர்களுடன் ஜோடியாக பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் எந்த தம்பதி அதிக பார்வையாளர்களை பெறுகின்றனர் என்பது தான் போட்டி. அப்படி போட்டியில் பங்கேற்றிருந்த நிலையில் கணவர் மனைவியை திடீரென கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்த்திராத மனைவி நிகழ்ச்சியிலேயே அழுதுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ நீதிமன்றத்தின் கவனத்தையும் பெற்றது. கணவனிடம் அடிவாங்கிய மனைவி புகார் அளிக்க மறுப்பு தெரிவித்ததால் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து அதிரடி காட்டியது. இது பெண்களுக்கு எதிரான குற்றம் எனச் சுட்டிக்காட்டியது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனைவியை அறைந்த கணவருக்கு ஓராண்டு சிறை தண்டனை. மனைவியின் அருகில் செல்லக் கூடாது. மனைவியை விட்டு 1000 அடி தள்ளி நிற்க வேண்டும், அல்லது 3 ஆண்டுகள் மனைவியிடம் பேசக் கூடாது என்று அதிரடி தீர்ப்பளித்தது. பாலியல் ரீதியான வன்முறையில் ஈடுபட்டதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்த தண்டனை ஸ்பெயின் மட்டுமல்ல உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஸ்பெயின் நாட்டைப் பொறுத்தவரை 2004-ம் ஆண்டு பாலின அடிப்படையிலான வன்முறையை ஒடுக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய முதல் ஐரோப்பிய தேசமாக விளங்கியது. மேலும் மாதவிடாயின் போது பெண்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ளவும் சட்டம் கொண்டுவந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/