தினேஷ் சாவ்லா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், நான்கு ஹோட்டல்களை நிர்வகிப்பதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் தொழில் பார்ட்னருமான இவர், அமெரிக்க விமான நிலையம் ஒன்றில், லக்கேஜுகளை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவ்லா ஹோட்டல்களின் தலைமை செயல் அதிகாரியான தினேஷ் சாவ்லா, அமெரிக்காவின் மெம்பிஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இரண்டு லக்கேஜுகளை திருடி தனது காரில் வைத்து இருந்து இருக்கிறார்.
இதுகுறித்து விமான நிலைய போலீசார் கூறுகையில், அவரது காரை தேடிய போது, அதில் சூட்கேஸ் இருந்ததை கண்டறிந்ததாகவும், காரில் இருந்த மற்றொரு சூட்கேஸ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே விமான நிலையத்தில் இருந்து திருடியதும் கண்டறியப்பட்டது என்றனர்.
சாவ்லா, மெம்பிஸ் திரும்பிய போது, 4000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள இரண்டு சூட்கேஸ்களை திருடியதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
நீண்ட காலமாக திருடி வந்ததை அவர் ஒப்புக் கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற திருட்டு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
திருட்டு குறித்து அவரிடம் விசாரித்த போது, திருடுவது குற்றம் என எனக்கு தெரியும். இருந்தாலும் த்ரில்லிங்கிற்காகவும், உற்சாகத்துக்காகவும் இதை செய்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.
ட்ரம்ப் மற்றும் சாவ்லாவின் பழக்கம் 1988ல் தொடங்கியது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வி கே சாவ்லா, டொனால்ட் ட்ரம்ப் சீனியரை சந்தித்து, கிரீன்வுட்டில் மோட்டல் ஒன்றை துவங்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். சீனியர் சாவ்லாவை அழைத்த ட்ரம்ப், சிறுபான்மையினர் சிறு தொழில் நிர்வாக கடனுக்கு விண்ணப்பிக்க பரிந்துரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.