/indian-express-tamil/media/media_files/2025/04/26/fgKD8SeecPmkqhVx7AAh.jpg)
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து
காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காமிலுள்ள பைசரனில் கடந்த 22-ந்தேதி தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். மிருகத்தனமான இந்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்ததும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒரு மோசமான தாக்குதல் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Trump on India-Pakistan tension
போப் பிரான்சிஸின் இறுதி சடங்கிற்காக ரோமுக்கு பயணம் செய்த டிரம்பிடம், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்களுடன் பேசுவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப், இது சமீபத்திய காலங்களில் ஜம்மு-காஷ்மீரில் நடந்த மிகக் கொடிய தாக்குதலாகும். நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், பாகிஸ்தானுடனும் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், உங்களுக்குத் தெரியும். மேலும் அவர்கள் காஷ்மீரில் 1,000 ஆண்டுகளாக அந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அநேகமாக அதை விட நீண்ட காலம் இருக்கலாம். இரு நாட்டு தலைவர்களையும் நான் அறிவேன். அவர்கள் இதற்கு ஒரு வழியிலோ (அ) வேறு வழியிலோ தீர்வை கண்டுபிடித்துவிடுவார்கள். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எப்போதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது என்றார்.
இந்தியா-பாகிஸ்தான் தலைவர்களை தொடர்பு கொள்வாரா என்பதை உறுதிப்படுத்த மறுத்த டிரம்ப், "1,000 ஆண்டுகளாக காஷ்மீர் போராட்டத்தைக் கொண்டுள்ளது. எல்லை பதட்டத்தை சரிசெய்வதற்கான வழியை கண்டுபிடித்துவிடுவார்கள் என நம்புகிறேன். காஷ்மீர் எல்லையில் 1,500 ஆண்டுகளாக பதற்றம் உள்ளது, அவர்கள் அதை எப்படியாவது சரிசெய்வார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஜூலை 2019-ல் ஜம்மு-காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தரின் பங்கை வகிக்குமாறு பிரதமர் மோடி தன்னிடம் கேட்டுக் கொண்டதாக டிரம்ப் கூறியிருந்தார். டிரம்ப் அறிக்கை வெளியிட்ட ஒருமணி நேரத்திற்குள், வெளியுறவு அமைச்சகத்தின் அப்போதைய அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், அமெரிக்க அதிபரின் அறிக்கைக்கு முரண்பட்டு, "பிரதமர் மோடியால் அத்தகைய கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை" என்று கூறினார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக @POTUS செய்தியாளர்களிடம் கூறியதை நாங்கள் பார்த்தோம். பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் அப்படி எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்னைகளும் இருதரப்பு ரீதியாக மட்டுமே விவாதிக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் நிலையான நிலைப்பாடாக இருந்து வருகிறது. பாகிஸ்தானுடனான எந்தவொரு ஈடுபாட்டிற்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அனைத்து பிரச்னைகளையும் இருதரப்பு ரீதியாக தீர்க்க அடிப்படையை வழங்குகிறது" என்று வெளியுறவு அமைச்சகத்தின் அப்போதைய அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் ட்வீட் செய்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.