அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அரசின் செலவினங்களை குறைப்பதற்காக, டி.ஓ.ஜி.இ. என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் தலைவராக, பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளார். இந்நிலையில், இந்தியாவில் தேர்தல்களின்போது ஓட்டுப் பதிவை அதிகரிப்பதற்காக வழங்கப்படும், 182 கோடி ரூபாய் நிதியை (18 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) நிறுத்தி,எலான் மஸ்க் சமீபத்தில் உத்தரவிட்டார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: USAID-CEPPS grant | Donald Trump’s latest: ‘$18 million to India for polls… they take advantage of us’
இந்த உத்தரவு இந்தியாவில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்கா வழங்கிய நிதி எதற்காக, எங்கு, எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 'அமெரிக்கா எந்த நிதியுதவியையும் வழங்கவில்லை. வங்கதேசத்துக்கு வழங்கியதை இந்தியாவுக்கு வழங்கியதாக கூறுகின்றனர்' என, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், இந்தியாவில் தேர்தல்களில் ஓட்டுப் பதிவு உயர்த்துவதற்காக நிதியுதவி வழங்கப்பட்டதாக, ஒரு வாரத்தில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக நேற்றும் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். கன்சர்வேடிவ் அரசியல் செயல் மாநாட்டில் (சி.பி.ஏ.சி) பங்கேற்ற டிரம்ப், சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சியை (யு.எஸ்.ஏ.ஐ.டி) தாக்கியப் பேசினார். மேலும், அவரது அரசாங்கத் திறன் துறை ( டி.ஓ.ஜி.இ.) வாஷிங்டன், டிசியில் உள்ள தேர்தல்கள் மற்றும் அரசியல் செயல்முறை வலுப்படுத்துதல் (சி.இ.பி.பி.எஸ்) கூட்டமைப்பு வழியாக, இந்தியாவில் தேர்தல்களின்போது ஓட்டுப் பதிவை அதிகரிக்க 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியாக அளித்திருப்பதாக பட்டியலிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 20 அன்று, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி (யு.எஸ்.ஏ.ஐ.டி) இந்தியாவில் எந்தவொரு திட்டத்திற்கும் தேர்தல்கள் மற்றும் அரசியல் செயல்முறை வலுப்படுத்துதல் (சி.இ.பி.பி.எஸ்) கூட்டமைப்புக்கு நிதியளிக்கவில்லை என்றும், வங்கதேசத்தில் வாக்காளர் திட்டத்திற்கு 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தது. இதில், 2024 ஜனவரி தேர்தலுக்கு முன் வங்கதேசம் மாணவர்களிடையே "அரசியல் மற்றும் குடிமை ஈடுபாட்டிற்காக" 13.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ஷேக் ஹசீனா வெளியேற்றப்படுவதற்கு ஏழு மாதங்களுக்கு முன்னர், இந்தத் தேர்தல்களின் நேர்மையை கேள்விக்குறியாக்கும் திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .
நாகோரிக் திட்டத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு செயல்பாட்டாளர்கள் திட்டத்திற்கு யு.எஸ்.ஏ.ஐ.டி-சி.இ.பி.பி.எஸ் நிதியைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தினர். அவர்களில் ஒருவர் நேரடியாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிடம் பேசினார்.
பிப்ரவரி 22 அன்று, தி வாஷிங்டன் போஸ்ட், சி.இ.பி.பி.எஸ் திட்டம் இந்தியாவில் டி.ஓ.ஜி.இ.-இன் விளக்கத்துடன் பொருந்தியதாக எந்தப் பதிவும் இல்லை என்று அந்த அமைப்பின் பணியை நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது. சி.இ.பி.பி.எஸ் ஆனது 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் யு.எஸ்.ஏ.ஐ.டி ஒப்பந்தத்தைக் கொண்டிருந்தது. அது இந்தியாவுக்காக அல்ல, ஆனால் அண்டை நாடான வங்கதேசத்திற்காக என்று தி வாஷிங்டன் போஸ் தெரிவித்துள்ளது. "உதவி திட்டங்களைப் பற்றிய அறிவு உள்ள" அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக அது மேற்கோள் காட்டியது: "அவர்கள் மற்ற திட்டங்களில் இருந்து எண்களை இணைக்கிறார்கள் என்று தெரிகிறது." என்று அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.
"இந்தியாவில் தேர்தல்கள் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது, ஏனென்றால் நாங்கள் ஒருபோதும் ஈடுபடவில்லை," என்று சி.இ.பி.பி.எஸ்-இன் பணியை நன்கு அறிந்த ஒருவர் தி போஸ்ட்டிடம் கூறினார். "டி.ஓ.ஜி.இ.-இன் கூற்றைக் கண்டு நாங்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தோம்." என்று அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்தியாவுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதாக டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். அவரது உரையில் சில மாற்றங்களை மட்டும் செய்து நிதியுதவி பற்றி பேசி வருகிறார். நேற்று கன்சர்வேடிவ் அரசியல் செயல் மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், "என்னதான் நடக்கிறது. நாம் ஏன் மீண்டும் ஓட்டுச் சீட்டு முறைக்கு மாறக் கூடாது? அதற்கு இந்தியா ஏன் உதவக் கூடாது. இந்தியாவுக்கு நம்முடைய நிதியுதவி தேவையில்லை. அவர்களிடமே அதிக பணம் உள்ளது.
இந்தியாவில் தேர்தல்களுக்காக நாம் பணம் கொடுக்கிறோம்; ஆனால், அது அவர்களுக்கு தேவையே இல்லை. அவர்கள் நம்மை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். உலகிலேயே மிகவும் அதிக வரியை இந்தியா விதிக்கிறது. இந்தியா, 200 சதவீதம் வரை வரி விதிக்கிறது. ஆனால், நாம் அவர்களுடைய தேர்தலுக்காக நிதியை அளித்து வந்துள்ளோம்." என்று அவர் கூறியுள்ளார்.