அமெரிக்காவின் 47-வது அதிபராக குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் இன்று பதவி ஏற்கிறார். அந்நாட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் டிரம்ப்க்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
கடும் குளிர் நிலவுவதால் கேபிடல் கட்டடத்தின் உள் அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து 2வது முறையாக டிரம்ப் வெற்றி பெற்றார்.
பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்னதாக வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் ஒன் அரங்கில் தனது ஆதரவாளர்களை சந்தித்து டிரம்ப் பேசினார். அதில், பல விஷயங்களைப் பற்றி டிரம்ப் பேசினார். மத்திய கிழக்கு போர்நிறுத்தம், டிக் டாக் தடை மற்றும் அதிபராக பதவியேற்ற பின் முதல் நாள் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை பேசினார்.
அமெரிக்கா எதிர்கொள்ளும் ஒவ்வொரு நெருக்கடியையும் சரி செய்ய வரலாற்று வேகத்துடனும் வலிமையுடனும் செயல்படுவேன் என்றும் டிரம்ப் கூறினார்
இந்த வார இறுதியில் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்வதற்கான தனது திட்டத்தையும் அவர் குறிப்பிட்டார். டிரம்ப் பதவியேற்ப்பு விழாவில் பதவி விலகும் அதிபர் ஜோ பிடன் பங்கேற்க உள்ளார். 2021ல் டிரம்ப் செய்தது போல் இல்லாமல் அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்தை உறுதி செய்யும் வகையில், விழாவில் கலந்து கொள்வதாக பைடன் உறுதி அளித்தார்.
அதோடு டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க், ஆப்பிள் சிஇஓ டிம் குக் மற்றும் டிக்டாக் சிஇஓ ஷோ செவ் உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.
மேலும், இந்தியாவில் இருந்து ஜனவரி 18 ஆம் தேதி வாஷிங்டன் டிசி சென்ற முகேஷ் மற்றும் நீடா அம்பானி விழாவில் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.